சென்னை:
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயமானது தொடர்பாக கேரள உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வரும் நிலையில், அக்குழு பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில் அமலாக்கத் துறை தனது விசாரணையை தொடங்கி உள்ளது.
இதன் ஒரு பகுதியாக, தமிழகம், கேரளா, கர்நாடகாவில் 21 இடங்களில் அமலாக்கத் துறை கடந்த 20-ம் தேதி சோதனை நடத்தியது.
இந்த சோதனையில் ரூ.1.30 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. 100 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள் ளது என்று அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2019 – 2025 காலகட்டத்தில், சபரிமலை கோயிலின் கருவறை கதவு சட்டங்கள், பீடங்கள், துவாரபாலகர் சிலைகளில் இருந்த தங்க முலாம் பூசப்பட்ட பாகங்கள் முறைகேடாக அகற்றப்பட்டுள்ளன.
அதிகாரப்பூர்வ பதிவேடுகளில் இவை வெறும் செப்புத் தகடுகள் என்று திட்டமிட்டு தவறாகக் குறிப்பிடப்பட்டு, பழுதுபார்ப்பு என்ற பெயரில் கோயில் வளாகத்தில் இருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளது.