தஞ்சாவூர்:
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தங்களிடம் எந்த கருத்தும் கேட்காமல், நட்டாற்றில் விட்டுவிட்டு திமுகவில் இணைந்ததால், அதிமுகவில் இணைந்துவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்தவருமான ஆர்.வைத்திலிங்கம் அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
ஆனால், அவரது ஆதரவாளர்களாக இருந்த தஞ்சாவூர் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் சாமிநாதன், சண்முகபிரபு, ராஜா, செல்லதுரை உள்ளிட்ட 30 பேர் திமுகவுக்கு செல்ல விருப்பம் இல்லாமல், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி முன்னிலையில் நேற்று மீண்டும் அதிமுகவில் இணைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியது: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீண்டும் அதிமுகவுக்குத்தான் செல்வார் என் நம்பியிருந்தோம்.
ஆனால், எங்களிடம் ஆலோசனையோ, கருத்தோ கேட்காமல் எதிரிகட்சியான திமுகவில் இணைந்ததால் அதிர்ச்சி அடைந்தோம்.
எனவே, எங்களை நட்டாற்றில் விட்டுச் சென்ற வைத்திலிங்கத்திடமிருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளோம்.
எங்களை போன்று பலரும் விரக்தியில் உள்ளனர். அவர்களும் விரைவில் அதிமுகவில் இணைய உள்ளனர் என்றனர்.
இதற்கிடையில் சென்னையிலிருந்து நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு வந்த வைத்திலிங்கம், ஓரிரு திமுக கட்சி நிர்வாகிகளை மட்டும் சந்தித்து வருகிறார்.
இவருக்கு விரைவில் தஞ்சாவூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவி வழங்கப்படஉள்ளதாகவும், அதன் பின்னர் தன்னுடைய செயல்பாடுகளில் தீவிர கவனம் செலுத்த உள்ளதாகவும் வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.