தமிழ் மக்கள் இந்த மண்ணில் படும் அனைத்து துயரங்களுக்கும் காரணம் காங்கிரஸ்தான்; முதலில் இந்தியை திணித்து எனது தாய் மொழியாம் தமிழை அழிக்க நினைத்தது காங்கிரஸ் – சீமான்!!

சென்னை:
“தமிழ் மக்கள் இந்த மண்ணில் படும் அனைத்து துயரங்களுக்கும் காரணம் காங்கிரஸ்தான்.

முதலில் இந்தியை திணித்து எனது தாய் மொழியாம் தமிழை அழிக்க நினைத்தது காங்கிரஸ்.” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், “தமிழகத்தில் ஆட்சி முறை மாற வேண்டும்.

தாலிக்கு தங்கம் கொடுப்பார்கள். பின்னர் மதுவை குடிக்கவைத்து அவர்களே தாலியை அறுப்பார்கள். ரேஷனில் இலவசமாக அரிசி போடுகிறார்கள்.

அதை எத்தனை அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வாங்கி சாப்பிடுகிறார்கள். மக்கள் விநியோகத்துக்கு வரும்போது தரம் குறைவாக இருக்கிறது.

தமிழகத்தின் தலைநகரில் இன்னும் தண்ணீர் தேங்கி கொண்டுதான் இருக்கிறது. மக்களை வெள்ளத்தில் மிதக்க விட்டுவிட்டு வெள்ள நிவாரணம் கொடுத்ததெல்லாம் ஆட்சி இல்லை. எவ்வளவு வெள்ளம் வந்தாலும், அதை வழிந்தோட செய்வதுதான் ஆட்சி.

எனக்கும், என் கொள்கைக்கும் யாரும் போட்டியில்லை, ஒருவர் இருமொழி கொள்கை என்பார், ஒருவருக்கு கொள்கை என்றால் என்னவென்றே தெரியாது. கூட்டணி அமைப்பவர்களுக்கு கொள்கை இல்லை, சீட்டுகள் மட்டுமே இலக்கு.

திமுகவுக்கு மாற்று அதிமுக என எப்படிச் சொல்ல முடியும். தமிழகத்தில் கடன் வளர்ச்சி தான் இருக்கிறதே தவிர, வேறு ஒன்றும் இல்லை. கூட்டணி வைத்து கூடி கொள்ளையடித்தால் எல்லாம் சரியாகிவிடுமா? தேர்தல் வந்த பிறகு பேரம் பேசுவது கேவலம்.

அரசியல் இங்கே வியாபாரம் ஆக்கப்படுகிறது. யார் அதிக காசு மற்றும் சீட்டுகள் கொடுக்கிறார்களோ அவர்களிடம் சென்று விடுகிறார்கள். அடர்த்தியான வறுமை, அறியாமை எனும் குழந்தையைப் பெறுகிறது.

வறுமையும் அறியாமையும் சேரும்போது மறதி வருகிறது. இவை மூன்றும் இப்போதிருக்கும் அரசியல்வாதிகளுக்கு முதலீடாக மாறிவிடுகிறது.

வெற்றியையும் தோல்வியையும் சமமாகக் கருதுபவன்தான் வீரன். வெற்றியடைந்தால் இருப்பேன்.. தோல்வியடைந்தால் சென்றுவிடுவேன் என்பவன் கோழை. எங்களுக்கு தெரியாத மூன்றெழுத்து பயம்.

எங்கள் பரம்பரைக்கே தெரிந்த மூன்றெழுத்து வீரம். திமுகவை ஒழிக்க வேண்டும் எனக் கூறுகிறார்களே தவிர, மக்களுக்கான அரசியலை கொண்டு வர வேண்டும் என நினைக்கவில்லை. மதவாத கட்சியை முதலில் கதவை திறந்து கொண்டு வந்தது யார்?

சீமானுக்கு வாக்களித்தால் பாஜக ஆட்சிக்கு வந்து விடும் எனக் கூறுகிறார்கள். இவர்களுக்கு அடிப்படை அறிவு கூட கிடையாது.

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்துவிடும் என சொல்வதற்கு ஒரு ஆட்சியா? ஒரு தலைவரா?. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வராது என்று தைரியமாக சொல்ல வேண்டும்.

தமிழ் மக்கள் இந்த மண்ணில் படும் அனைத்து துயரங்களுக்கும் காரணம் காங்கிரஸ்தான். முதலில் இந்தியை திணித்து எனது தாய் மொழியாம் தமிழை அழிக்க நினைத்தது காங்கிரஸ்” இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *