சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர்களுக்கான ஓய்வூதியம் 2,000 ரூபாயிலிருந்து 3,400 ரூபாயாக உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!

சென்னை:
சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர்களுக்கான ஓய்வூதியம் 2,000 ரூபாயிலிருந்து 3,400 ரூபாயாகவும், பணி நிறைவின் போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை 1 லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை கடந்த ஜன.20-ல் தொடங்கியது. கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று ஆளுநர் உரைக்கு பதிலுரை அளித்த முதல்வர் ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு கவனம் பெறுகிறது.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறியது: “இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையிலே முதல்முறையாக 2008-ல் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் திமுக அரசால் வழங்கப்பட்டது.

அந்த சாதனையின் தொடர்ச்சியாக, சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர்களுக்கான ஓய்வூதியம் 2,000 ரூபாயிலிருந்து 3,400 ரூபாயாகவும், பணி நிறைவின் போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை 1 லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சத்துணவு சமையல் உதவியாளர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் 2,000 ரூபாயிலிருந்து 3,200 ரூபாயாகவும், பணி நிறைவின் போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை 50,000 ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர்கள் இறந்து விட்டால் அவர்களின் குடும்பத்துக்கு குடும்ப ஓய்வூதியமாக 1,200 ரூபாயும், மேலும் சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் உள்ளிட்ட இதர சிறப்பு காலமுறை ஊதியப் பணியாளர்கள் இறந்து விட்டால் அவர்களின் குடும்பத்துக்கு குடும்ப ஓய்வூதியமாக 1,000 ரூபாயும் வழங்கப்படும்.

சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் மேற்குறிய பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் இறந்த பணியாளர்களின் இறுதிச் சடங்கு செலவினங்களுக்காக 20,000 ரூபாய் வழங்கப்படும்

இந்த அறிவிப்புகள் மூலம் தற்போதுள்ள சிறப்பு காலமுறை ஊதியப் பணியிடங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்களும் இத்தகைய பணியிடங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும், அவங்களுடைய குடும்ப உறுப்பினர்களும் பயனடைவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

1 லட்சம் வீடுகள்: மேலும் அவர் வெளியிட்ட அறிவிப்பில், ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 2 லட்சம் வீடுகள் உருவாகி இருக்கக்கூடிய நிலையில், புதிதாக 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்ற அறிவிப்பையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

2,200 கிலோமீட்டர் கிராமச் சாலைகள் மேம்படுத்தப்படும்: ‘முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்’ கீழ், 8,911 கோடி ரூபாய் மதிப்பில 20,484 கிலோமீட்டர் நீளம் உள்ள கிராமச் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் புதிதாக 1,088 கோடி ரூபாய் மதிப்பீட்டுல சுமார் 2,200 கிலோமீட்டர் கிராமச் சாலைகள் மேம்படுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.

கூடுதலாக 1.8 லட்சம் பேருக்கு மாதாந்திர ஓய்வூதியம்: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் அளித்த விண்ணப்பங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளின் அடிப்படையிலே, கூடுதலாக 1 லட்சத்து 80 ஆயிரம் நபர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும்.

இதற்கான விழா வரும் 4.2.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் என்று அறிவித்தார்.

முதல்வரின் பதிலுரை, பல்வேறு அறிவிப்புகளைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *