மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது நமது திராவிட மாடல் அரசு – உதயநிதி..!

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் முன்னாள் எம்எல்ஏ-வான ஆண்டி அம்பலம் இல்ல திருண விழா நடைபெற்றது. அமைச்சர் இ.பெரியசாமி தலைமை வகித்தார். அமைச்சர் அர.சக்கரபாணி வரவேற்றார்.

அமைச்சர் மூர்த்தி, எம்எல்ஏ-க்கள் இ.பெ.செந்தில்குமார், காந்திராஜன், திண்டுக்கல் எம்பி-யான சச்சிதானந்தம், மாவட்ட கவுன்சிலர் விஜயன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மணமக்களை வாழ்த்தி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியது: “நான் இங்கு மணமக்களை வாழ்த்த மட்டும் வரவில்லை. துணை முதல்வர் ஆனதற்கு உங்களிடம் வாழ்த்துப் பெறவும் வந்துள்ளேன்.

இது சுயமரியாதை திருமணம். பெரியார், அண்ணா, கருணாநிதி சொன்னதை நான் சொல்லி வருகிறேன். இவர்கள் மூவரும் பெண்கள் முன்னேற்றத்துக்கு பாடுபட்டனர். இந்த வழியில் நமது முதல்வரும் பெண்கள் பொருளாதார சுதந்திரம் அடைய பாடுபட்டு வருகிறார். இலவச பேருந்து பயணம் மூலம் இதுவரை 530 கோடி முறை பெண்கள் அரசுப் பேருந்தில் பயணித்துள்ளனர்.

மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது நமது திராவிட மாடல் அரசு. பெண்கள் முன்னேற்றத்துக்கு பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அண்ணா சூட்டிய தமிழ்நாடு என்ற பெயரை ஒருவர் மாற்ற முயற்சித்தார்.

தமிழக மக்களின் எதிர்ப்பால் மன்னிப்புக் கேட்டார். இப்போது தமிழ்த்தாய் வாழ்த்தில் உள்ள திராவிடத்தை நீக்க வேண்டும் என சிலர் கிளம்பியுள்ளனர். திமுகவின் கடைசி தொண்டன் உள்ளவரை, தமிழனையும், தமிழ்நாட்டையும், திராவிடத்தையும் தொட்டுக்கூட பார்க்க முடியாது. இந்தி திணிப்பை ஒரு போதும் தமிழ்நாடு ஏற்காது.

மக்களவைத் தேர்தல் செமி ஃபைனல் போன்றது. இதில் 40-க்கு 40 என 100-க்கு 100 வாங்கி வெற்றி பெற்றோம். வரும் சட்டசபை தேர்தல் தான் ஃபைனல். இதில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறவேண்டும்.

பெரியாரும் சுயமரியாதையும் போல, அண்ணாவும் தமிழ்நாடும் போல, கருணாநிதியும் தமிழும் போல, ஸ்டாலினும் உழைப்பும் போல மணமக்கள் வாழவேண்டும். உங்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு தமிழில் பெயர் வைக்கவேண்டும்” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

இவ்விழாவில் திண்டுக்கல் மாவட்ட திமுக சார்பில் அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோல் வழங்கினர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *