இனப்பெருக்கத்துக்காக கடற்கரைக்கு வரும் ஆமைகளை இழுவலைகளில் இருந்து பாதுகாக்க, மீனவர்களுக்கு ரூ.6.40 கோடியில் திட்டம்!!

சென்னை:
இனப்பெருக்கத்துக்காக கடற்கரைக்கு வரும் ஆமைகளை இழுவலைகளில் இருந்து பாதுகாக்க, மீனவர்களுக்கு ரூ.6.40 கோடி மதிப்பில் ஆமை விலக்கு சாதனங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆண்டுதோறும் கடல் ஆமைகளின் இனப்பெருக்க காலமான ஜன.1 முதல் ஏப்.30-ம் தேதி வரை கடல் ஆமைகள் முட்டையிடும் தமிழக கடற்பகுதியில் அவற்றை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குறிப்பாக, கடற்கரையில் இருந்து 5 கடல் மைல் தூரத்துக்குள் விசைப்படகுகள் மீன்பிடிப்பில் ஈடுபடுவது, கடல் ஆமைகள் முட்டையிடும் பகுதியாக அறிவிக்கப்பட்ட இடங்களில் இயந்திரம் (10 குதிரைத் திறனுக்கு மேல்) பொருத்திய பாரம்பரிய மீன்பிடிபடகுகள் மீன்பிடிப்பில் ஈடுபடுவது, திருக்கை மீன் வலைகள் பயன்படுத்துவது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன.

கூட்டு ரோந்து மூலமாகவும், 5 கடல் மைல்களுக்குள் மீன்பிடிப்பில் ஈடுபடும் விசைப்படகுகளின் இயக்கத்தை இஸ்ரோ டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்திய ‘நப்மித்ரா’ இணயவழி செயலி மூலமாகவும் கண்காணித்து கடல் ஆமைகள் பாதுகாக்கப்படுகின்றன.

மேலும் வனத்துறை, கடலோரப் பாதுகாப்புக் குழுமம், கடலோரக் காவல் படை, மீன்பிடி படகு உரிமையாளர்கள் சங்கம், அரசுசாரா நிறுவனங்கள், மீனவ கிராம ஊராட்சித் தலைவர்களை இணைத்து,மீனவ கிராமங்களில் கடல் ஆமை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. வலையில் சிக்கும் ஆமைகளை எவ்வாறு உரிய சாதனம் மூலம்வெளியேற்றலாம் என்பது குறித்த விளக்கமும் அளிக்கப்பட்டது. இனப்பெருக்க காலகட்டத்தில் இதுபோல 270 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

ஆமைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல், மீன்பிடி தொழிலும் பாதிக்கப்படாமல், மீன்பிடி இழுவலைகளில் சிக்கும் ஆமைகளை பாதுகாப்பாக வெளியேற வழிவகுக்கும் ‘ஆமை விலக்கு சாதனம்’ (Turtle Excluder Device) கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மத்திய மீன்வள தொழில்நுட்ப மையத்தின் (CIFT) உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் மீன்பிடி இழுவலைகளில் கடல் ஆமைகள் சிக்காமல் வெளிச்செல்வதுடன், மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும். தமிழகத்தில் உள்ள மீன்பிடி இழுவலை படகுகளுக்கு இந்த சாதனத்தைஇலவசமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி முதல்கட்டமாக 50 மீன்பிடி விசைப்படகுகளுக்கு ரூ 11.75 லட்சத்திலும், அதைத் தொடர்ந்து2,613 படகுகளுக்கு ரூ.6.29 கோடியிலும் ஆமை விலக்குசாதனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்போது இழுவலைகளில் இந்த சாதனங்களை பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *