சென்னை:
“கரூரில் 41 பேரின் மரணத்துக்கு நீங்களும் ஒரு காரணம்தானே, அதற்கான பிராயசித்தங்களை செய்யாமல், என்ன வழக்கு வரபோகிறதோ என்ற பயத்தில் 72 நாட்களுக்கும் மேல் பனையூரில் பதுங்கி, 15 நாட்கள் கட்சியின் அலுவலகத்தையே மூடிவைத்தீர்களே?” என்று தவெக தலைவர் விஜய்யை அதிமுக விமர்சித்துள்ளது.
இதுகுறித்து அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “பனையூர் பண்ணையார் அவர்களே, ஊழல் என்பது சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் செயல்.
அப்படிப் பார்த்தால், சட்டத்திற்கு விரோதமாக, தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று அதன் மூலம் பல கோடிகள் கண்ட நடிகர் விஜய் ஆகிய நீங்கள் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி.
‘மத்திய அரசிற்கு அடிமை’ என்பது அதிமுகவின் வரலாற்றிலேயே இல்லாத ஒன்று. எப்போதெல்லாம் மாநில நலனுக்கும், உரிமைகளுக்கும் சோதனை வருகிறதோ , அப்போதெல்லாம் தமிழகத்திற்கான உரிமைகளை போராடி பெற்று , மக்களின் நலன்களை வாதாடி பெற்ற இயக்கம், எங்கள் அஇஅதிமுக என்னும் பேரியக்கம் என்பதுதான் வரலாறு.
தன் திரைப்படம் வெளியாக வேண்டுமென அன்றைய முதல்வர் வீட்டில் 5 மணி நேரம் கைகட்டி காத்திருந்து , வெளியிட்ட படத்தின் பெயரை நாங்கள் சொல்லவா? இல்லை எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவிய முதலமைச்சர் பெயரை நீங்கள் சொல்லுகீறீர்களா?
ஊழல் என்பது வெறுமனே அரசியலில் பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல. Undue influence மூலம் தனக்கான வருமானத்தைப் பெருக்க அதிகார மையத்திடம் மண்டியிடுவதும் அதே வகை தான் பனையூர்காரரே.
அதிமுகவின் ஆட்சியை ஊழல் ஆட்சி என்று குறைசொல்லிவிட்டு, அந்த ஆட்சியில் கல்வி அமைச்சராக இருந்த செங்கோட்டையனை ஒருங்கிணைப்பாளர் என்று பக்கத்திலேயே உட்கார வைத்து கொள்வதுதான், நீங்கள் சொல்லுகின்ற தூயசக்திக்கான விளக்கவுரையா?
நீங்கள் செய்தீர்களோ? இல்லையோ? ஆனால் கரூரில் 41 பேரின் மரணத்திற்கு நீங்களும் ஒரு காரணம்தானே, அதற்கான பிராயசித்தங்களை செய்யாமல், என்ன வழக்கு வரபோகிறதோ என்ற பயத்தில் 72 நாட்களுக்கும் மேல் பனையூரில் பதுங்கி, 15 நாட்கள் கட்சியின் அலுவலகத்தையே மூடிவைத்தீர்களே? அதுதான் நீங்கள் எவ்வளவு பெரிய வீரர் என்பதற்கான விடை.
உலக வரலாற்றிலேயே முதன்முறையாக இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் சொல்லாமல் , பனையூரில் வந்து ஆறுதல் வாங்கி செல்ல வைத்தது எல்லாம் வேற லெவல் பண்ணையார்த்தனம். இதற்காக உங்களுக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாம்.
கரூர் சென்று கண்ணீரைத் துடைக்காமல் , கிளிசரின் கண்ணீரோடு , போட்டோக்களை வைத்து பேருக்கு ஒரு அஞ்சலி நிகழ்ச்சி நடத்திவிட்டு குற்ற உணர்வு சிறிது கூட இல்லாமல், அந்த நிகழ்ச்சியிலும் தன்னை சுயவிளம்பரம் செய்து கொண்ட நார்சிஸ்ட் பண்பு மிகவும் ஆபத்தான அரசியலின் அடையாளம்.
அரசியலில் நல்லவர்களாக இருக்கலாம் , வல்லவர்களாக இருக்கலாம் ஆனால் ஒன்றுமே தெரியாத-புரியாத , தனது ரசிகர்களை கூட ஏமாற்றும் , இன்னும் டைரக்டர் நடிகரவாகவே இருக்கும் தவெக தலைவர் போன்றவராக மட்டும் இருந்துவிட கூடாது!
நீங்கள் எங்கள் கழகம் குறித்து, மனனம் செய்து ஒப்புவிக்கும் ஒட்டுமொத்தக் கருத்துருவும் ஒன்னா நம்பர் குப்பையே.
அறிவாலய குப்பையோடு, பனையூர் குப்பையையும் கூட்டியெறிந்திடுவோமாக” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.