கோவை:
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தொடர்வதால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 4 நாட்களில் சிறுவாணியின் நீர்மட்டம் 13.72 அடி உயர்ந்துள்ளது.
கோவையின் முக்கிய நீராதாரங்களில் ஒன்று சிறுவாணி அணை. கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது.
சிறுவாணி அணையில் இருந்து தினமும் குடிநீர் தேவைக்கு நீர் எடுக்கப்பட்டு, பகிர்மானக் குழாய்கள் வழியாக சாடிவயலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது.
அங்கு சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீர் பின்னர், கோவை மாநகராட்சியின் 30 வார்டுகளுக்கும், வழியோரம் உள்ள 22-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் விநியோகிக்கப்படுகிறது. சிறுவாணி அணையின் நீர்தேக்க அளவு 49.53 அடியாகும்.
கேரளாவில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்புக்கு பின்னர், பாதுகாப்பு காரணங்களால் சிறுவாணி அணையில் 44.61 அடி உயரம் வரை மட்டுமே தண்ணீர் தேக்கப்படுகிறது. பொதுவாக மற்ற பருவமழைக்காலங்களை விட, தென்மேற்கு பருவமழைக்காலத்தில் சிறுவாணி அணைப் பகுதியிலும், அதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மழை அதிகம் இருக்கும். இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரிக்கும்.
அதன்படி, நடப்பு தென்மேற்கு பருவமழைக்காலம் தொடங்கி உள்ள சூழலில், சிறுவாணி அணை மற்றும் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதுதொடர்பாக கோவை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறும்போது, “சிறுவாணி அணையில் கடந்த 24-ம் தேதி 19.02 அளவுக்கு நீர்மட்டம் இருந்தது. அன்றைய தினம் அணையில் 80 மி.மீ மழை பதிவாகியிருந்தது.
அதன் தொடர்ச்சியாக, கடந்த 25-ம் தேதி 21.55 அடி, 26-ம் தேதி 26.60 அடி, 27-ம் தேதி (நேற்று) 30.24 அடிக்கு நீர்மட்டம் இருந்தது.
இன்றைய நிலவரப்படி ( மே 28) 32.73 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. அதாவது, கடந்த 24-ம் தேதி நிலையை ஒப்பிடும் போது, கடந்த 4 நாட்களில் அணையின் நீர்மட்டம் 13.71 அடி உயர்ந்துள்ளது.
மேலும் இன்றைய நிலவரப்படி சிறுவாணி அணையில் இருந்து 74.50 எம்.எல்.டி குடிநீர் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது.
இன்றைய நிலவரப்படி அணையில் 90 மி.மீ மற்றும் அடிவாரப் பகுதியில் 70 மி.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. நீர் எடுப்பதற்காக உதவும் மூன்று வால்வுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன” என்றனர்.