சென்னை:
அன்றும் இன்றும் என்றும் தமிழகத்தில் இந்திக்கு இடமில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் சார்பில் மொழிப்போர் தியாகிகள் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள தியாகிகள் தாளமுத்து, நடராசன் நினைவிடத்தில் வணக்கம் செலுத்தினார்.
மேலும், அங்குள்ள சமூகப் போராளி எஸ்.தருமாம்பாள் நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து, எழும்பூரில் தாளமுத்து – நடராசன் மாளிகை வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள தாளமுத்து, நடராசன் ஆகியோரின் சிலைகளை திறந்துவைத்து, புகைப்படக் காட்சிகளை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சிகளில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், அரசு உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபத்தில் தாளமுத்து -நடராசன் உள்ளிட்டோரின் படங்களுக்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் சமூகவலைத்தளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
முதல்வர் ஸ்டாலின்: மொழியை உயிராய் நேசிக்கும் ஒரு மாநிலம், இந்தித் திணிப்புக்கு எதிராக ஒன்று திரண்டு போராடியது.
இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள பல்வேறு மொழிவழி தேசிய இனங்களின் உரிமையையும் அடையாளத்தையும் காத்தது.
தமிழுக்காகத் தங்கள் இன்னுயிரையே ஈந்த அந்தத் தியாகிகளை நன்றியோடு வணங்குகிறேன். நம் தமிழுணர்வு சாகாது; இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: சங்கத்தில் வளர்ந்து சரித்திரங்கள் பல படைத்து, சீரிளமை கொண்டு விளங்கும் நம் உயிருக்கு நேராம் செந்தமிழர் தாயாம் அன்னைத் தமிழை காக்க தன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்.
பாமக தலைவர் அன்புமணி: தியாகிகள் எந்த நோக்கத்துக்காக அவர்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்தார்களோ, அதை அடைவதற்காக தொடர்ந்து போராட அனைவரும் உறுதியேற்போம்.
மநீம தலைவர் கமல்ஹாசன்: மொழியை அழிக்க வருபவர்களின் ஆதிக்கத்துக்கு அடிபணிய மாட்டோம் என முழங்கி உயிரை ஈந்த மொழிப்போர் தியாகிகளுக்கு என் வணக்கங்கள்.
தவெக தலைவர் விஜய்: மொழிப்போர் தீரர்களின் தியாகத்தைப் போற்றுவோம். ஒப்பற்ற நம் அன்னைத் தமிழை உயிரெனக் காப்போம்.அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தவாக தலைவர் தி.வேல்முருகன் ஆகியோரும் புகழஞ்சலி செலுத்தினர்.