திருவாரூர்/ தஞ்சாவூர்:
திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 500 ஏக்கர் பரப்பளவிலான சம்பா நெற்பயிர்கள் முற்றிலும் சாய்ந்து சேதமடைந்துள்ளன.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். தற்போது பல்வேறு பகுதிகளில் அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கடந்த 2 தினங்களாக பெய்த மழையால் திருவாரூர் அருகே கானூர், ஓடாச்சேரி, தென் ஓடாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த 500 ஏக்கர் பரப்பளவிலான சம்பா நெற்பயிர்கள் முற்றிலுமாக சாய்ந்து, நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
ஏற்கெனவே பெய்த மழையால் விவசாயிகள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்திருந்த நிலையில், தற்போது பெய்யும் மழையால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து கானூர் விவசாயி அழகர்ராஜ் கூறியது:
கானூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 500 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள சம்பா நெற்பயிர்கள் மழையில் நனைந்து சாய்ந்துவிட்டன.
உடனடியாக வேளாண் துறை அதிகாரிகள் பார்வையிட்டு கணக்கெடுப்பு செய்ய வேண்டும். ஆண்டுதோறும் பயிர்க் காப்பீடு செய்து வருகிறோம். அந்த காப்பீடு விவசாயிகளுக்கு கிடைக்கப் பெறுவதில்லை.
பயிர்க் காப்பீடு திட்டத்தில் விதிகளை தளர்த்தி, பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என தெரிவித்தார்.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையளவு விவரம்(மி.மீட்டரில்): நீடாமங்கலம் 10, நன்னிலம் 9.60, திருவாரூர் 9, திருத்துறைப்பூண்டி 8.60, குடவாசல் 6.40, வலங்கைமான் 5, முத்துப்பேட்டை 4.60, மன்னார்குடி 3. இதேபோல, தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் சாரல் மழை பெய்து வருகிறது.
நேற்று காலை முதல் இரவு வரை அவ்வப்போது விட்டுவிட்டு இந்த சாரல் மழை பெய்ததால், பொதுமக்கள் அவதிப்பட்டனர். மழை ஒருபக்கம் இருந்தாலும், கடுமையான குளிரும் நிலவியது.
இந்த மழையால் சம்பா அறுவடை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா நெல் 3.50 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், டிச.15-ம் தேதி முதல் அறுவடை தொடங்கியுள்ளது.
இதற்காக மாவட்டம் முழுவதும் 483 நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, இதுவரை 20 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நெல் அறுவடைக்காக வெளி மாவட்டங்களிலிருந்து ஏராளமான அறுவடை இயந்திரங்களும் வந்துள்ளன.
இந்நிலையில், மாவட்டம் முழுவதும் சாரல் மழை பெய்து வருவதால், நெற்கதிர்களில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது.
மேலும், சில வயல் பகுதிகளில் தண்ணீ்ர் தேங்கியும், ஈரப்பதம் அதிகரித்துள்ளதால், நெற்கதிர்கள் வயலிலேயே சாய்ந்து காணப்படுகின்றன. இதனால் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.