தமிழ்நாட்டிலும், மத்தியிலும் உள்ள அனைத்து கட்சிகளும் தேமுதிகவுக்கு தோழமை கட்சிகள் தான்; மக்களுக்கு நல்லது செய்யும் வகையில் ஒரு மகத்தான கூட்டணியை தேமுதிக அமைக்கும் – கூட்டணி குறித்து பிரேமலதா பேச்சு!!

அருப்புக்கோட்டை:
“தமிழ்நாட்டிலும், மத்தியிலும் உள்ள அனைத்து கட்சிகளும் தேமுதிகவுக்கு தோழமை கட்சிகள் தான். மக்களுக்கு நல்லது செய்யும் வகையில் ஒரு மகத்தான கூட்டணியை தேமுதிக அமைக்கும். தேமுதிகவுக்கு உரிய இடங்கள் கிடைக்கும்” என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி கிராமத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரமலதா இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, முத்தரையர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தங்கள் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற பிரச்சாரத்தில் அவர் பேசுகையில், “தமிழகம் முழுவதும் நேரடியாக சென்று மக்களை சந்திக்க இருக்கிறேன்.

இது நெசவாளர்கள் அதிகம் உள்ள பூமி. விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் தேமுதிக எப்போதும் உற்ற நண்பனாக இருக்கும். ஒரு காலத்தில் நெசவாளர்களுக்கு பிரச்சினை வந்தபோது ஒரு கட்சி பிரியாணி, ஒரு கட்சி கஞ்சியும் கொடுத்தாங்க.

ஆனால், விஜயகாந்த் மட்டும் தான் நீங்க நெசவு செய்த அந்த துணிகளை 10 லட்சம் ரூபாய்க்கு தன் சொந்த செலவிலேயே வாங்கி தமிழ்நாடு முழுக்க அதை மக்களுக்கு கொடுத்து உங்களுக்கு பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் உருவாக்கிக் கொடுத்தார்.

இதே அருப்புக்கோட்டை தொகுதியில் ராமானுஜபுரத்தில் பிறந்து வளர்ந்தவர் விஜயகாந்த். விஜய பிரபாகரன் இத்தொகுதியில் போட்டியிட்டார். உண்மை மறைக்கப்பட்டு அவர் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. கடவுள் இருந்தால் நிச்சயம் தர்மம் ஜெயிக்கும்.

விஜய பிரபாகரன் எப்பொழுதும் விருதுநகர் மாவட்ட மக்களுக்கு துணை நிற்பார். அவர் எப்பவுமே உங்கள் வீட்டுப் பிள்ளை. அவரு என்னைக்குமே மக்களோட மக்களாக இருந்து இந்த விருதுநகர் தொகுதிக்கு நல்லது செய்வார்.

நல்லவர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம். தர்மம் வெல்லும், நியாயம் கிடைக்கும் என்று சொல்லி 2026 சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டுக்கு மக்களுக்கும் நல்லது செய்யும் வகையில் ஒரு மகத்தான கூட்டணியை தேமுதிக அமைக்கும்.

அது மக்களும் தொண்டர்களும் விரும்பும் ஒரு கூட்டணியாக அனைவரும் வரவேற்கும் ஒரு கூட்டணியாக நிச்சயமாக இருக்கும்.

விரைவில் தேர்தல் வரும் அனைவரும் தயாராக இருங்கள். ஒரு நல்ல ஆட்சியை கொண்டு வர வேண்டியது நம் கடமை. எனவே 2026 நிச்சயம் மக்களுக்கு நல்லது நடக்கும் ஒரு ஆண்டாக இருக்கும் என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், “பிப்ரவரி 3-ம் தேதி சென்னைக்கு சென்றபின் கூட்டணி குறித்து மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி ஒரு நல்ல முடிவை அதிகாரப்பூர்வ முடிவை தலைமை கழகத்திலிருந்து அறிவிப்போம்.

அதற்குப்பின் தேர்தல் பணிகளை தொடங்குவோம். இன்னும் ஒரு மாத காலம் இருக்கிறது. தேர்தல் அறிவிப்பதற்கு முன் ஒரு நல்ல முடிவை அறிவிப்போம்.

விஜய பிரபாகரன் ஏற்கனவே விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார். அவர் வெற்றி பெற்றுவிட்டார். ஆனால், அந்த வெற்றி செல்லாது என்ற தீர்ப்பு இருக்கிறது. விஜயகாந்த் சொல்லியது போல தர்மம் ஜெயிக்கும்.

அந்த வகையில் விஜய பிரபாகரன் தேர்தலில் போட்டியிடுகிறாரா இல்லையா, எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதை முடிவு செய்யவில்லை. முதலில் யாருடன் கூட்டணி, எத்தனை வேட்பாளர்கள் என்பதை முடிவு செய்வோம்.

ஆட்சி அமைப்பதற்கு தான் கட்சி ஆரம்பிக்கிறார்கள். அனைவருக்கும் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. தேமுதிகவுக்கு உரிய இடங்கள் கிடைக்கும். கூட்டணி அமைப்பவர்களிடம் கூட்டணி தர்மத்தோடு செயல்பட்டு அத்தனை தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

தமிழ்நாட்டிலும், மத்தியிலும் உள்ள அனைத்து கட்சிகளும் தேமுதிகவுக்கு தோழமை கட்சிகள் தான். விஜயகாந்த் குருபூஜைக்கு அத்தனை பேரும் வந்திருந்தார்கள். எல்லாரோடும் நாங்கள் நட்பாக தான் இருக்கிறோம். ஆனால் கூட்டணி என்பது உரிய நேரத்தில் நாங்கள் அறிவிப்போம்.” என்று கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *