பெங்களூரு:
கர்நாடக கலால் துறை அமைச்சர் ஆர்.பி.திம்மாப்பூர் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழலில் ஈடுபட்டுள்ளதாக அம்மாநில மது விற்பனையாளர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு புகார் அனுப்பப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கர்நாடக மாநில மது விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் குருசுவாமி பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடக மாநில கலால் துறையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போதைய காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது.
அந்த துறையின் அமைச்சர் ஆர்.பி.திம்மாப்பூர் அதிகாரிகளின் இடமாற்றம், மதுக்கடை உரிமங்கள் வழங்குதல், உரிமம் புதுப்பித்தல் ஆகியவற்றில் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குகிறார்.
பெங்களூருவில் புதியதாக திறக்கப்பட்ட சி.எல்.7 பார் உரிமம் வழங்குவதற்கு ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரையில் லஞ்சம் வாங்கியுள்ளார்.
இது குறித்து முதல்வர் சித்தராமையாவிடம் நேரடியாக முறையிட்டபோது, அவர் விசாரணை நடத்துவதாக கூறினார்.
ஆனால் கலால் துறை அதிகாரிகளை அவர் விசாரிக்கவில்லை. எனவே இந்த முறைகேடுகள் தொடர்பாக காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு புகார் கடிதம் அனுப்ப இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாஜக போராட்டம்: இந்த குற்றச்சாட்டை பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சியினர் கையிலெடுத்துள்ளனர்.
எதிர்க்கட்சி தலைவரும் மூத்த பாஜக தலைவருமான ஆர்.அசோகா, இதுகுறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டும் என பேரவைத் தலைவர் யு.டி.காதரிடம் கோரிக்கை விடுத்தார்.
அதனை ஏற்க மறுத்ததால், பாஜகவினர் அவையில் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன்பு பாஜகவினர் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது கலால்த்துறை அமைச்சர் ஆர்.பி.திம்மாப்பூர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என முழக்கம் எழுப்பினர்.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா கூறுகையில், “கலால் துறையில் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
எனவே கலால் துறை அமைச்சர் ஆர்.பி.திம்மாப்பூர் உடனடியாக தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சிபிஐக்கு பரிந்துரை செய்ய வேண்டும். அவர் பதவி விலகும்வரை பாஜகவினர் சட்டப்பேரவைக்கு உள்ளேயும் வெளியேயும் போராட்டம் நடத்துவார்கள்” என தெரிவித்தார்.
ராஜினாமா செய்ய மறுப்பு: கலால் துறை அமைச்சர் ஆர்.பி.திம்மாப்பூர் கூறுகையில், “இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரம் அற்றவை. சிலர் என் மீது பொய்யான புகாரை கூறி வருகின்றனர்.
இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன். நான் தவறு செய்யாததால், எனது பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்.” இவ்வாறு அவர் கூறினார்.
கலால்துறை அமைச்சர் ஆர்.பி.திம்மாப்பூர் மீதான ஊழல் புகாரால் முதல்வர் சித்தராமையாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.