இந்தியாவிலேயே முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பான ஒரே மாநிலம் தமிழகம் மட்டும் தான்; அதற்கு திமுக தான் காரணம் – ஸ்டாலின் கருத்து!!

சென்னை:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) சார்பில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு, கும்பகோணம் தாராசுரம் புறவழிச் சாலை மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் தலைமை வகித்தார்.

மாநாட்டில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசியதாவது: வழிபாட்டுத் தலங்கள் என்பவை தொழுகைக்கான இடங்களாக மட்டும் இல்லாமல் சமூக ஒற்றுமை, வளர்ச்சி, கல்வி ஆகியவற்றுடன் தொடர்புடையது என்பதை மெய்ப்பித்து வருகிறீர்கள்.

திமுகவை பொறுத்தவரை நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம். நாம் அனைவரும் உள்ளத்தால், உணர்வால் உடன் பிறப்புகள். முஸ்லிம் மக்களுக்காக கருணாநிதி செய்துள்ள சாதனைகள் ஏராளம்.

மிலாதுநபிக்கு முதல்வராக இருந்த கருணாநிதி அரசு விடுமுறை அறிவித்தார். அதிமுக ரத்து செய்தாலும் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடுமுறை வழங்கினார்.

உருது பேசும் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தார். காயிதே மில்லத் மணிமண்டபம் கட்ட நிதி, இடம் ஒதுக்கினார் என பெரும் பட்டியல் உள்ளது.

முஸ்லிம்கள் வேறு, தான் வேறு என கருணாநிதி நினைத்ததில்லை. அதே வழியில் திராவிட மாடல் ஆட்சி செயல்படுகிறது.

இந்த 5 ஆண்டுகளில் ஹஜ் இல்லம் கட்ட அடிக்கல் நாட்டியது, மாநில ஹஜ் குழுவுக்கு ஆண்டு நிர்வாக மானியம் ரூ.80 லட்சமாக உயர்த்தியது, 4 ஆண்டுகளில் தமிழகத்தி லிருந்து 11,364 ஹஜ் பயணிகள் புனிதப் பயணம் மேற்கொள்ள ரூ.24.54 கோடி மானியம் வழங்கியது என பல சலுகைகள் வழங்கப்பட்டன.

5 அறிவிப்புகள்: தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு பெற்றுள்ள 1,537 உலமாக்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாகவும், 44 பேருக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் ரூ.1.500-ல் இருந்து ரூ.2,500 ஆகவும், நலவாரியத்தில் உள்ள உலமாக்களில் 1,000 பேருக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

சென்னை, மதுரையில் வக்பு தீர்ப்பாயம் செயல்பட்டு வரும் நிலையில், கோவையிலும் கூடுதலாக வக்பு தீர்ப்பாயம் அமைக்கப்படும்.

மாநகராட்சிகளில் கல்லறைத் தோட்டம், கபர்ஸ்தான் இல்லாத இடங்களில் அரசு இடம் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படும்.

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இருக்கும் 10 உருதுமொழி ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும். மற்ற கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

திமுக தான் காவல் அரண்: இந்தியாவிலேயே முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பான ஒரே மாநிலம் தமிழகம் மட்டும் தான்.

அதற்கு திமுக தான் காரணம். திமுக தான் சிறுபான்மை மக்களை காக்கும் காவல் அரண். இங்கு நிலவும் அமைதிச் சூழல் சிலர் கண்களை உறுத்துகிறது.

இங்கு எப்படியாவது குழப்பம் ஏற்படுத்தலாம் என்ற அவர்களின் ராஜதந்திரங்கள் வீணாகி வருகிறது.

அதனால் தங்களுக்கு ஏற்ற அடிமைகளான ஈ.டி, சிபிஐ, ஐ.டி அமைப்புகள் மூலம் மிரட்டி தங்களுக்கான கூட்டணியை உருவாக்கி உள்ளனர்.

துரோகங்களின் அர்த்தமாக உள்ள பழனிசாமி, முஸ்லிம்களுக்கு எதிரான தனது பயணத்தை தொடர்கிறார்.

அவருக்கு தெரிந்தது காலில் விழுவது, காலை வாரிவிடுவது மட்டும் தான். அதிமுக ஆதரவால் தான் 2019-ல் பாஜக அரசு குடியுரிமை சட்ட மசோதாவை மாநிலங்க ளவையில் நிறைவேற்றியது.

இப்போது ஒரே மேடையில் நிற்கும் அந்த மக்கள் விரோதக் கூட்டணியை ஒட்டுமொத்தமாக விரட்டும் கடமை நம் அனைவருக்கும் உள்ளது.

இங்கு பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தால் அது தமிழகத்தையே நாசப்படுத்திவிடும். அதை தடுக்கும் துணிச்சலும், தைரியமும் திமுக கூட்டணிக்குத் தான் உள்ளது.

திமுக தொண்டர்கள் வீடு வீடாக பரப்புரையை தொடர்ந்தது போல, நீங்களும் உடனடியாக பரப்புரைக்கு தயாராகுங்கள்.

நாம் ஒற்றுமையாக இருந்தால் எந்த சூழலும் தமிழகத்தின் வளர்ச்சியை சீர்குலைக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *