வரும் சட்டப்பேரவை தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை; என்னை நம்பி வந்த விசுவாசிகள் 5 பேருக்காவது சீட் வாங்கிக் கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன் – சரத்குமார் திட்டவட்டம்!!

சென்னை:
‘‘வரும் சட்டப்பேரவை தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை, என்னை நம்பி வந்த விசுவாசிகள் 5 பேருக்காவது சீட் வாங்கிக் கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன்” என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரான நடிகர் சரத்குமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக நேற்று தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: விஜய் மட்டுமல்ல… எல்லா கட்சிகளுமே ஊழலுக்கு எதிராகத் தான் பேசுகின்றன.

அவர் ஒன்றும் புதிதாகச் சொல்லவில்லை. கூட்டணி ஆட்சியா அல்லது தனிக் கட்சி ஆட்சியா என்பது தேர்தல் முடிந்து ஆட்சி அமைக்கும் போது எங்கள் கட்சியின் மாநில தலைவர், அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அமர்ந்து பேசி எடுக்க வேண்டிய முடிவு. அது பற்றி நான் கருத்துக் கூற முடியாது.

வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்கித் தருவது தான் எங்களைப் போன்ற நிர்வாகிகளின் பொறுப்பு. தலைமை என்ன கூறுகிறதோ அதற்குக் கட்டுப்பட்டு செயல்படுவேன்.

இந்த தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை. என்னுடன் பயணிப்பவர்களுக்கு வாய்ப்பை வாங்கித் தர வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன்.

இந்தக் கூட்டணி வெற்றி பெறுவதற்காக அயராது உழைக்க உறுதி எடுத்துக் கொண்டுள்ளேன். என்னுடன் பயணித்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.

கடின உழைப்பாளிகளான அந்த விசுவாசிகளுக்கு 5 இடங்களையாவது பெற்றுத் தர வேண்டும் என நினைக்கிறேன். இது தொடர்பாக மாநில தலைவரிடம் பேசவுள்ளேன். நான் போட்டியிடாத போது ராதிகாவும் போட்டியிடமாட்டார்.

சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் எனக் கூறுபவர்கள் சிறுபான்மையினருக்கு என்ன செய்தார்கள் என்பதை ஒரு பட்டியல் போட்டுக் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

எந்த வகையில் அவர்களுக்கு துன்பம் வந்தது, எந்த வகையில் இவர்கள் பாதுகாவ லர்களாக இருந்தார்கள் என்பதை தெளிவாகக் கூற வேண்டும். 30 ஆண்டுகளாக சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் எனக் கூறி வருபவர்கள் இதனை தெளிவுபடுத்த வேண்டும்.

கூட்டம் அனைவருக்கும் வரும். வடிவேலுக்கும் கூட்டம், நாளைக்கு அஜித் போனாலும், ரஜினிகாந்த் போனாலும் கூட்டம் வரத்தான் செய்யும். கூட்டம் வரும், ஆனால் அவர்கள் வாக்களிப்பார்களா என்பது தேர்தலில் தான் தெரிய வரும்.

எதற்காக வாக்களிக்கப் போகிறோம், எந்தக் கொள்கைக்காக வாக்களிக்கப் போகிறோம், யார் வந்தால் சிறந்த ஆட்சியை கொடுக்க முடியும் எனச் சிந்தித்து வாக்களிப்பவர்கள் மக்கள் தான்.

என்மீது மக்களின் நம்பிக்கை போனதால் நான் கட்சியைக் கலைக்கவில்லை. தேசியநீரோட்டத்தில் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அனைவரிடம் கலந்து பேசி தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொண்டோம். இவ்வாறு தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *