சென்னை:
திமுக விரைவில் பேச்சுவார்த்தைக்கு அழைக்க உள்ள நிலையில், அகில இந்திய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் 39 தொகுதிகளின் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய காங்கிரஸ் தீவிரமாக உள்ளது.
இந்நிலையில், திமுக எம்.பி. கனிமொழி, டெல்லியில் ராகுல் காந்தியை கடந்த வாரம் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியலை தயாரிக்க மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரிடம் ராகுல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஆலோசிக்க கிரிஷ் சோடங்கர் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஒரு புதிய கட்சி காங்கிரஸூடன் கூட்டணி வைக்க விரும்புகிறதென்றால், அந்த அளவுக்கு காங்கிரஸ் வலிமையாக இருப்பதைக் காட்டுகிறது.
திமுகவுடன் கூட்டணி பேச்சுவாரத்தை நடத்தும் விவகாரத்தில் எங்கள் தரப்பில் தாமதம் இல்லை. பேச்சுவார்த்தைக்கு தயாராகவே உள்ளோம். இன்னும் பேச்சுவார்த்தையை தொடங்காததால், காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கையை இறுதி செய்யவில்லை என்றார்.
பின்னர் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் 131-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறும்போது, “திமுகவிடம் இருந்து காங்கிரஸ் கைநழுவி போகவில்லை.
தொகுதி பங்கீடு தொடர்பாக ராகுல்- கனிமொழி இடையே பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது. இன்னும் ஓரிரு நாட்களில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதன்தொடர்ச்சியாக கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை, கட்சியின் தேசிய செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டப்பேரவை கட்சித் தலைவர் ராஜேஷ்குமார் ஆலோசனை நடத்தினர்.
இதில், தமிழகத்தில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் தலா ஒரு சட்டப்பேரவை தொகுதிவீதம், 39 தொகுதிகளை அடையாளம்கண்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை தலைமைக்கு அனுப்பி ஒப்புதல்பெற்று, திமுகவிடம் பட்டியல் வழங்கப்பட உள்ளது.
மேலும் இந்த பேச்சுவார்த்தையின்போது, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இடங்கள் தொடர்பாகவும் பேசி முடிவு செய்வது எனவும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், இம்மாதம் காங்கிரஸ் நடத்தும் 3 மாநாடுகள் குறித்தும் அதில் பங்கேற்கும் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல், பிரியங்கா ஆகியோரின் பிரச்சார ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், தேர்தலில் போட்டியிட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்ட நிலையில், அதை மாவட்டங்களுக்கு அனுப்பி, அங்கு மாவட்ட வேட்பாளர் ஆய்வுக் குழுக்களை அமைத்து பரிசீலிக்குமாறு செல்வப்பெருந்தகை உத்தரவிட்டுள்ளார்.