சென்னை:
முருகன் கோயில்கள் தைப்பூசத் திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘அரோகரா’ கோஷத்துடன், பால்குடம், காவடிகளை சுமந்து வந்து நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
தமிழ்க் கடவுளான முருகப் பெருமானுக்கு உகந்த தைப்பூசத் திருவிழா நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இதை யொட்டி, சென்னை வடபழனி முருகன் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் கட்டுக் கடங்காத வகையில் காணப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, திருப்பள்ளியெழுச்சி மற்றும் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது.
குழந்தைகள், பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி எடுத்தும், அலகு குத்தியும், தீ மிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
முருகப் பெருமானுக்கு ராஜ அலங்காரம், விபூதி அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
இரவு 8.30 மணி அளவில் வடபழனி ஆண்டவர் மயில் வாகனத்தில் நான்கு மாடவீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தார்.
இரவு 10 மணி வரை பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. ஞாயிறு விடுமுறை நாள் என்பதால், அதிகாலை முதலே பக்தர்கள் குவியத் தொடங்கினர். இதனால், ஆற்காடு சாலை, 100 அடி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மிக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது. போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பாரிமுனை கந்தக்கோட்டம், சிறுவாபுரி, குன்றத்தூர், குரோம்பேட்டை குமரன்குன்றம், வல்லக்கோட்டை, திருப்போரூர் கோயில்களிலும் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன.
ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆயிரக்கணக்கானோர் பால்குடம், காவடி சுமந்து வந்து வழிபட்டனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோயில்களில் உள்ள முருகன் சந்நிதிகளிலும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் எழுப்பிய பக்தி முழக்கம் விண்ணதிர ஒலித்தது.