கடலூர்:
கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும்.
தேவநாதசாமி கோவிலில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வேண்டுதல் செய்து கொண்டவர்கள் இங்கு திருமணம் செய்து கொண்டு தேவநாதசாமியை தரிசித்து வருகின்றனர்.
இக்கோவிலில் முகூர்த்த நாட்களில் 100 முதல் 300-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் இன்று( 4-ந்தேதி) ஆவணி மாதம் வளர்பிறை முகூர்த்தம் என்பதால் தேவநாத சுவாமி கோவிலில் அதிகாலை 4 மணி முதல் திருமணங்கள் நடைபெறத் தொடங்கியது.
இதை தொடர்ந்து அதிகாலை முதல் மணமக்கள் தங்கள் உறவினர்களுடன் திருவந்திபுரம் ஆர்ச் பகுதியில் இருந்து நடந்தும் ஷேர் ஆட்டோக்களிலும் சென்றனர்.
இதனால் திருவந்திபுரம் பகுதியில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றிருந்தன. இந்த நிலையில் கோவில் மண்டபத்தில் 105 திருமணங்களும், அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் சுமார் 25 திருமணங்கள் என 130 திருமணம் நடைபெற்றது.
மணமக்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிகாலையில் திரண்டதால் கடலூர்-பாலூர் சாலையில் காலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதிகாலை முதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்ததால் போக்குவரத்து நெரிசலை உடனுக்குடனுக்குடன் சரி செய்து அனுப்பி வைத்தனர்.