திருச்சி:
தேர்தல் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், திட்டமிட்டபடி திருச்சியில் மார்ச் 8-ம் தேதி திமுக மாநில மாநாடு நடைபெறும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ‘ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற தலைப்பில் மார்ச் 8-ம் தேதி திருச்சியில் திமுக மாநில மாநாடு பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது.
திருச்சி சிறுகனூரில் 2021-ல் திமுக மாநாடு நடைபெற்ற இடமே தற்போதைய மாநாட்டுக்கும் தேர்வு செய்யப்பட்டு, அங்கு பந்தல்கால் நடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என். நேரு தலைமை வகித்தார். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார்.
திமுக மாவட்டச் செயலாளர்கள் வைரமணி, எம்எல்ஏ தியாகராஜன், மாநகரச் செயலாளர்கள் மு.அன்பழகன், மு.மதிவாணன் மற்றும் எம்எல்ஏக்கள் சவுந்திரபாண்டியன், பழனியாண்டி, ஸ்டாலின்குமார், கதிரவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது: திருச்சியில் மார்ச் 8-ம் தேதி நடைபெற உள்ள திமுக மாநில மாநாடு, இதற்கு முன்பு நடைபெற்ற மாநாடுகளைவிட சிறப்பாக இருக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
300 ஏக்கர் வாகன நிறுத்துமிடம் உட்பட 500 ஏக்கர் பரப்பளவில் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் 10 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள்.
ஒருவேளை தேர்தல் தேதி அறிவிப்பு வந்தாலும், திட்டமிட்டபடி மாநாடு நடைபெறும். அப்போது, மாநாடு தொடர்பான செலவுகள் தலைமைக் கழகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு, தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படும்.
திருச்சியை 2-வது தலைநகராக்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை தேர்தல் அறிக்கை கருத்துக் கேட்புக் குழுவிடம் தெரிவித்துள்ளோம். கட்சித் தலைமை நிதி நிலைமைக்கு ஏற்ப அதுகுறித்து முடிவு செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பின்னர், தஞ்சாவூரில் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஆறு மாதங்களுக்கு முன்பே திமுக தேர்தல் பரப்புரையை தொடங்கிவிட்டது.
30 ஆண்டுகாலமாக தீர்க்க முடியாத பிரச்சினைகள் அனைத்தையும் முதல்வர் தீர்த்து வைத்துள்ளார்.
திமுக கூட்டணியில் புதிதாக சேருவது யார் என்பது குறித்து முதல்வர் தான் இறுதி முடிவு செய்வார்.
தமிழக முதல்வர் கூட்டணி கட்சிகளை நல்லபடியாக வைத்துள்ளார். திமுக கூட்டணி மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளதால் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்” என்றார்.