சென்னை,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில், “தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு 2026″ தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாட்டில் 22,794.78 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீடு மற்றும் 65,937 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு என்ற வகையில் 127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. இவை பாரம்பரிய சுற்றுலா, சாகச சுற்றுலா, MICE சுற்றுலா, சுற்றுசூழல் சுற்றுலா போன்ற பல்வேறு சுற்றுலா பிரிவுகளில் மேற்கொள்ளப்பட உள்ளன.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை, மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய சுற்றுலா மேம்பாட்டுப் பகுதிகளில் பெரிய அளவிலான தனியார் முதலீட்டை ஈர்க்கும் வகையிலும், தமிழ்நாட்டிலுள்ள பழம்பெரும் திருக்கோயில்கள், இயற்கை எழில் கொஞ்சும் மலை மற்றும் வனப்பகுதிகள், அழகிய கடற்கரைகள் போன்ற பல்வேறு சுற்றுலாத் தளங்கள் பலதரப்பட்ட சுற்றுலாப் பயணிகளையும் கவரும் வகையிலும், தமிழ்நாட்டில் முதல்முறையாக நடத்தப்படும் “தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு 2026″ முதலமைச்சர் தொடங்கி வைத்து, பல்வேறு சுற்றுலா நிறுவனங்களின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளையும் பார்வையிட்டார்.
சுற்றுலா வணிகத்தில் அதிகமான தனியார் முதலீடுகளை ஈர்க்கும் இலக்குடன், இந்தியாவின் சிறந்த சுற்றுலா முதலீட்டு தளமாக தமிழ்நாட்டை நிலைநிறுத்துவது, தனியார் முதலீட்டாளர்கள், சுற்றுலா நடத்துபவர்கள், மற்றும் தொழில்துறை பங்குதாரர்களை ஒரே தளத்தின் கீழ் அரசுடன் ஒன்றிணைப்பது, பார்வையாளர் அனுபவங்களை மேம்படுத்தும் மற்றும் வருவாய் வழிகளை விரிவுபடுத்தும் புதுமையான சுற்றுலா தயாரிப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை ஊக்குவித்தல் போன்றவை இந்த மாநாட்டின் நோக்கமாகும்.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்ககம் (StartupTN) மற்றும் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து, தமிழ்நாடு உலக சுற்றுலா மாநாடு 2026 முன்னிட்டு சுற்றுலா புத்தாக்க ஹேக்கத்தான் என்ற போட்டியை இணைந்து நடத்தியது.
இந்த ஹேக்கத்தான், தமிழ்நாட்டின் சுற்றுலா வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் உணவு சார்ந்த சுற்றுலா, வேளாண்மை மற்றும் கிராமிய அனுபவ சுற்றுலா, பாரம்பரிய மற்றும் பண்பாட்டு சுற்றுலா, சூழலியல் மற்றும் சாகச சுற்றுலா, நலவாழ்வு மற்றும் மருத்துவ சுற்றுலா, டிஜிட்டல் சுற்றுலா புத்தாக்கங்கள் ஆகிய ஆறு துறைகளை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டது.
மதிப்பீட்டின் அடிப்படையில், Xera ரோபோட்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட், தமிழ்நிலம் தமிழ்பண்ணை (Thamizhnilam Tamizhpannai), Ortus இந்தியா டூரிசம் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் வெற்றி பெற்றவர்களாக தேர்வு செய்யப்பட்டன. முதலமைச்சர் வெற்றி பெற்ற நிறுவனங்களுக்கு தலா ரூ.1 இலட்சம் ரொக்கப் பரிசு வழங்கி வாழ்த்தினார்.
மயிலாடுதுறை மாவட்டம் – பூம்புகாரில் 23 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவில், கடலூர் மாவட்டம் – சிதம்பரத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு 8 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவில், செங்கல்பட்டு மாவட்டம் – மாமல்லபுரத்தில் உள்ள மரகத பூங்காவில் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் 8 கோடி ரூபாய் செலவில் என மொத்தம் 40 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற 3 சுற்றுலா மேம்பாட்டுப்பணிகளை முதலமைச்சர் இன்று பொதுமக்கள்பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் – திருக்கடையூரில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் ஓட்டல் தமிழ்நாடு அமைக்கும் பணி மற்றும் தரங்கம்பாடியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபாதை, வாகன நிறுத்துமிடம், நுழைவுக் கட்டணம் வழங்குமிடம், மின்சார அறை, சுகாதார வளாகம் உள்ளிட்ட சுற்றுலா வளர்ச்சிப் பணிகள்; என மொத்தம் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
இந்த மாநாட்டில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், ஆர்.ராஜேந்திரன், டி.ஆர்.பி. ராஜா, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர். ராஜா, இ.கருணாநிதி, எஸ்.எஸ். பாலாஜி, மு.பாபு, வரலட்சுமி, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், சுற்றுலா துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.மணிவாசன், வர்த்தகத் துறை செயலாளர் வி.அருண் ராய்,
தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தாரேஸ் அகமது, சுற்றுலாத்துறை ஆணையர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, செங்கல்பட்டு கலெக்டர் சினேகா, கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஆனந்த் குழுமத்தின் செயல் தலைவர் அஞ்சலி சிங், சுற்றுலாத்துறை தலைவர் ரவி கோசைன், WTTCH செயல் இயக்குநர் சுமிட்ரோ கர், VIN Fast தலைவர் பாம் சான் ச்சாவ் பல்வேறு முதலீட்டாளர்கள், சுற்றுலா நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.