மதுரை:
எஸ்ஐ தேர்வு முடிவு திரும்பப் பெறப்பட்டது குறித்து சீருடைப் பணியாளர் தேர்வாணையம் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த குருசாமி, ஆனந்தராஜா, உயர் நீதிமன்ற மதுரை அமர் வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: உதவி காவல் ஆய்வாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் டிச.21-ல் தேர்வு நடத்தியது.
இந்தத் தேர்வில் பிரிவு ஏ-வில் தமிழ் பகுதி தேர்வுவினாக்கள் இடம் பெற்றிருந்த நிலையில், பிரிவு பி பகுதியில் பாடத்திட்டத்தில் குறிப்பிட்டபடி தமிழ் வினாக்கள் இடம் பெறவில்லை.
அதற்குப் பதிலாக உளவியல் பகுதியில் இருந்து 10 வினாக்கள் கூடுதலாக கேட்கப்பட்டிருந்தன. இதனால் பலர் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை உள்ளது.
எனவே உதவி காவல் ஆய்வாளர் தேர்வை ரத்து செய்தும், அதுவரை தேர்வு முடிவுக்கு இடைக்காலத் தடை விதித்தும், புதிதாகத் தேர்வு நடத்தவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரப் பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், தேர்வுக்கான பாடத்திட்டத்தில் தமிழில் இருந்து 10 வினாக்கள் இடம்பெறும் என குறிப்பிட்டிருந்த நிலையில், அவ்வாறு வினாக்கள் கேட்கப்பட வில்லை. ஆனால், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில், ஒவ்வொரு சமூக பிரிவுக்கான கட்- ஆஃப் மதிப்பெண்களை குறிப்பிடாமல் ஒட்டுமொத்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது.
தொழில்நுட்பக் கோளாறு: அரசுத் தரப்பில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் தவறு இருந்ததால் அது திரும்பப் பெறப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதி, தேர்வு முடிவை திரும்பப் பெற்றதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய சீருடைப் பணியாளர் தேர்வாணையத் தலைவருக்கு உத்தரவிட்டு விசாரணையை பிப்.4-க்கு (நாளை) தள்ளிவைத்தார்.