சென்னை:
பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியர்-உத்தண்டி இடையே ரூ.2,100 கோடியில் உயர்மட்டச்சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் கடந்த டிச.24-ம் தேதி ஐதராபாத்தை சேர்ந்த கேஎன்ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
உயர்மட்டச்சாலை அமைக்கும் பணியை கேஎன்ஆர் நிறுவனம் குறிப்பிட்டிருந்த தொகையைவிட ரூ.700 கோடி குறைவான செலவில் முடித்து தருவதாக, மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த திலிப் பில்ட்காப் என்ற நிறுவனம் ஒப்பந்தப்புள்ளி அளித்திருந்த நிலையில், அந்த நிறுவனத்தை நிராகரித்து விட்ட திமுக அரசு, கேஎன்ஆர் நிறுவனத்துக்கு ரூ.2,100 கோடி ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.
கேஎன்ஆர் நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை வழங்குவதற்காகவே திலிப் பில்ட்காப் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஒப்பந்தப்புள்ளியை திமுக அரசு திட்டமிட்டு தள்ளுபடி செய்திருக்கிறது.
ரூ.700 கோடி வரை ஊழல் நடைபெற்றிருக்கலாம் என்பதால் இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிடவேண்டும் என்றார்.