விருதுநகர்:
விருதுநகர் அருகே ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் திமுக இளைஞரணி தென் மண்டல நிர்வாகிகள் கூட்டம் நாளை (பிப். 6) நடைபெறுகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு காத்திருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டியளித்துள்ளார்.
இதுகுறித்து விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் நிதி அமைச்சருமான தங்கம் தென்னரசு அளித்த பேட்டியில், ‘‘விருதுநகர் அருகே கல்குறிச்சியில் திமுக தென் மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது.
இதில் திண்டுக்கல் முதல் கன்னியாகுமரி வரை தென் தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களைச் சேர்ந்த திமுக இளைஞரணி நிர்வாகிகள் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்து உரையாற்றுகிறார்.
இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் மாநாடு போல் நடைபெறும். அமைச்சர்கள் பலரும் கட்சி நிர்வாகிகள் பலரும் இதில் பங்கேற்கின்றனர்.
அரசு ஆணைப்படி அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டு சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளிலும் முறையாக அனுமதி பெற்று இந்த மாநாடு நடத்தப்படுகிறது. மாநாட்டுக்கு வரும் அனைவருக்கும் குடிநீர், வாகன வசதி, மின்விளக்கு, உணவு, கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மருத்துவ குழுவினரும் தயார்படுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் காலம் என்பதால் எத்தகைய தகவல்களை இந்த மாநாட்டில் முதல்வரும் துணை முதல்வரும் தெரிவிக்கிறார்கள் என்பதை எதிர்பார்க்கலாம். தேர்தலை ஒட்டி மிகப்பெரிய செய்தி இருக்கும்’’ என்று கூறினார்.