தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாஸ்மாக் ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்!! டிடிவி தினகரன்….

சென்னை:
தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாஸ்மாக் ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாஸ்மாக் ஊழியர்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் முத்துச்சாமி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடு டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ஏற்கனவே நிலவும் ஊழியர்கள் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை எடுக்காத டாஸ்மாக் நிர்வாகம், தற்போது மதுபான காலி பாட்டில்களையும் திரும்பப் பெற வேண்டும் என்ற பணிச்சுமையையும் ஏற்றியிருப்பது டாஸ்மாக் பணியாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, குறைவான ஊதியம் மற்றும் பணிப்பாதுகாப்பற்ற சூழலில் பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டிய திமுக அரசு, காவல்துறையை ஏவி அவர்கள் மீது அடக்குமுறையைக் கையாள முற்படுவது கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாஸ்மாக் ஊழியர்களின் பிரதிநிதிகளை மீண்டும் அழைத்துப் பேசி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளான பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் ஆகியவற்றை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *