மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்த ஒரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை – உதயநிதி ஸ்டாலின்!!

தஞ்சாவூர்:
மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்த ஒரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை என்றும், தமிழ்நாடு என்ற பெயரே இல்லாமல் வஞ்சிக்கப்பட்டுள்ளது என்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தஞ்சாவூரில் இன்று காலை ((பிப்.6) முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் இல்லத் திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது: “​தஞ்சாவூர் மாவட்டம் எப்படி திராவிட இயக்கத்துக்கு செல்வாக்கான ஒரு மாவட்டமோ, அதேபோல கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கும் செல்வாக்கான மாவட்டம். அப்படிப்பட்ட திராவிட இயக்கமும், கம்யூனிஸ்ட் இயக்கக் குடும்பமும் இணைகிற விழாவாக, ஒரு சிறப்பான நிகழ்ச்சியாக இந்தத் திருமணம் இங்கே நடைபெற்றிருக்கின்றது.

​இன்றைக்கு முதல்வர் ஸ்டாலின் “மகளிர் விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம், மகளிர் உரிமைத் தொகை” என மகளிருக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். ​இப்படி பல்வேறு சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருவதால், தமிழ்நாடு இந்தியாவிலேயே வளருகின்ற மாநிலங்களில் 11.19 சதவீத வளர்ச்சியோடு முதல் மாநிலமாக தற்போது விளங்கி வருகின்றது.

இதையெல்லாம் பொறுக்க முடியாத மத்திய பாஜக அரசு, இன்றைக்குப் பல்வேறு வகையில் தமிழ்நாடு அரசுக்குத் பல தொல்லைகளைக் கொடுத்து வருகிறது. நிதி உரிமையைப் பறிப்பது, மொழி உரிமையைப் பறிப்பது, மீண்டும் புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்து இந்தியையும் சமஸ்கிருதத்தையும் தமிழக மாணவர்கள் மீது திணிப்பது என செயல்படுகின்றனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்த மத்திய பட்ஜெட்டில், தமிழ்நாட்டுக்கு எந்த ஒரு திட்டமும் இல்லை. பழனி மாணிக்கம் மத்திய நிதித்துறை இணை அமைச்சராக இருந்தபோது, தமிழ்நாட்டினுடைய வளர்ச்சிக்காகப் பல திட்டங்களைக் கொண்டு வந்தவர். ஆனால் இப்போதுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்று பெருமையாக சொல்லுவார், ஆனால் தமிழ்நாட்டுக்கு எந்த ஒரு திட்டத்தையும் அறிவிக்கவில்லை.

இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாடு என்கிற வார்த்தையே பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. ​இப்படி மத்திய அரசு தமிழ்நாட்டைப் பல வகைகளில் வஞ்சித்து, பல்வேறு இடைஞ்சல்களைக் கொடுத்து வருகின்றது. இதையெல்லாம் கண்டிக்க வேண்டிய ஒரு எதிர்கட்சித் தலைவர் இருக்கின்றார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டைப் படிச்சு முடிக்கிறதுக்கு முன்னாடியே, மிகச் சிறந்த பட்ஜெட் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

முரட்டு பக்தர்களைக் கேள்விப்பட்டிருப்பீங்க, முரட்டு அடிமைகளைப் பார்த்திருக்கீங்களா? பாஜகவுடைய ஒரு முரட்டு அடிமையாக இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி திகழ்ந்து இந்த பட்ஜெட்டை வரவேற்றிருக்கிறார். இப்படி எத்தனை அடிமைகள் வந்தாலும் சரி, பழைய அடிமைகள், புதிய அடிமைகள் வந்தாலும் சரி, நிச்சயம் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் குறைந்தது 200 தொகுதிகள் திமுக வெற்றி பெற்று, தலைவர் ஸ்டாலின் மீண்டும் முதல்வராக அமரப் போவது உறுதி.

அதற்கான தொடக்கமாக இந்த தஞ்சாவூர் மாவட்டம் நிச்சயமாக இருக்கும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. திமுக 7-வது முறையாக ஆட்சி அமைக்க வேண்டுமானால், ஸ்டாலின் முதல்வராக நாற்காலியில் அமர வேண்டுமானால், அடுத்த இரண்டு மாதங்களுக்கு இங்கே வந்திருக்கக்கூடிய திமுக நிர்வாகிகள், கடுமையாக உழைக்க வேண்டும்’’ என்றார்.

இவ்விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கோவி.செழியன், முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், எம்.பிக்கள் ச.முரசொலி, சு.கல்யாண சுந்தரம், முன்னாள் எம்.பி டி.கே.ரெங்கராஜன், எம்எல்ஏ-க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், சாக்கோட்டை க.அன்பழகன், நா.அசோக் குமார், கா.அண்ணா துரை, பூண்டி கலைவாணன், முத்து ராஜா, உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *