சென்னை:
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை தனிமைப்படுத்துவதே பாஜகவின் நோக்கம் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் இண்டியா கூட்டணி வலிமையாக இருக்கிறது. அதை சிதைக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சியை திமுக கூட்டணியில் இருந்து வெளியே கொண்டுவர வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம்.
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸை பிரித்து தனிமையாக்கி, அதன் வாக்கு வங்கியை குறைத்து, சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின வாக்குகளை சிதறடித்து தமிழகத்தை பிடித்துவிட வேண்டும் என மதவாத பாஜக கனவு காண்கிறது.
இதில் தவெகவை பற்றி நான் பேசவில்லை. ஆனால் மதவாத சக்திகளையும், பாசிச சக்திகளையும் தமிழகத்தில் கால் ஊன்ற விடமாட்டோம்.
மேலும், காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகளை குறைக்க திமுக திட்டமிடுவதாக கூறப்படுவதும் உண்மையல்ல.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுற்றுப்பயணம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அப்போதே காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதியை கூட குறைக்க மாட்டோம்.
இதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என்று சொன்னார். அவருடன் மூத்த அமைச்சர்களும் இருந்தனர். தற்போது காலம் போய் கொண்டிருக்கிறது.
பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்து தொகுதி பங்கீடு குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தி இருக்கிறோம்.
கூட்டணியை வலுப்படுத்த சில புதிய கட்சிகளை கூட்டணிக்குள் சேர்க்க வேண்டும் என்று கூட சொல்லியிருக்கிறோம்.
அடுத்த ஒரு வாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கான இடங்கள் எத்தனை என்பது உறுதியாகிவிடும்.
அதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக கூட்டணிக்குள் வருவதை திமுக தலைவர் தான் முடிவு செய்யவேண்டும். அவர்தான் கூட்டணிக்கு தலைவர். ராமதாஸும், விசிக தலைவர் திருமாவளவனும் நெருக்கமாக இருந்தவர்கள் தான்.
இருவருக்கும் இடையே இடைவெளி எல்லாம் இல்லை. அவருக்கு ஒன்று என்றால் இவர் பேசுவார்.
இவருக்கு ஒன்று என்றால் அவர் பேசுவார். விசிக கொடியை ராமதாஸ் ஏற்றியிருக்கிறார். வன்னியர் சங்க கொடியை திருமாவளவன் ஏற்றியிருக்கிறார்.
இவ்வாறு இணக்கமாக இருந்தவர்கள் தான் இருவரும். எனவே தேவை என்றால் ஒருவருக்கொருவர் சந்தித்து பேசி சரி செய்துகொள்வார்கள். அதை அவர்கள் தான் முடிவு செய்யவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.