ஐபிஎல் அணிகளான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்ரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை வாங்க உலக முதலீட்டாளர்கள் கடும் போட்டி!!

ஐபிஎல் அணிகளான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்ரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை வாங்க உலக முதலீட்டாளர்கள் கடும் போட்டியில் இறங்கியுள்ளதாக கிரிக் இன்போ செய்தி அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்சிபி அணிக்காக 8 முதலீட்டாளர்கள், ராஜஸ்தான் ராயல்ஸுக்காக 5 முதலீட்டாளர்கள் இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்சிபி அணியின் மதிப்பு 1.2 முதல் 1.8 பில்லியன் அமெரிக்க டாலர் வரை இருக்கும் என கணிக்கப்படுகிறது. அதே நேரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மதிப்பு 1.2 முதல் 1.4 பில்லியன் டாலர் வரை இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த மதிப்பு, 2021-ல் BCCI லக்னோ மற்றும் அகமதாபாத் ஐபிஎல் அணிகளை ஒன்றாக ரூ.12,715 கோடிக்கு விற்ற தொகையை விட அதிகமாக இருக்கும் என்பதால், ஐபிஎல் அணிகளின் சந்தை மதிப்பு சகட்டுமேனிக்கு உயர்ந்துள்ளது என்பதற்கு இது முக்கிய சான்றாக இருக்கிறது.

ஆர்சிபி அணிக்கான முதலீட்டாளர்கள் பட்டியலில், மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பின் இணை உரிமையாள்ர் அவ்ரம் கிளேசர், மணிப்பால் குழுமம், சீரம் இன்ஸ்டிட்யூட் உரிமையாளர் அதார் பூனாவாலா, டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம், பிரபல தனியார் முதலீட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கான போட்டியிலும் இதேபோல் சர்வதேச முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது ஆர்சிபி அணி டியாஜியோ நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மனோஜ் பாதாலே தலைமையிலான ‘எமெர்ஜிங் மீடியா’ நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலும் உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கான இறுதி ஒப்பந்தப் புள்ளிகள் மார்ச் முதல் வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்சிபி அணி தொடர்பான ஒப்பந்தப் புள்ளி தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை; ஆனால் பிப்ரவரியில் நடைபெறும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐபிஎல் கிரிக்கெட்டின் வணிக மதிப்பு உலக அளவில் எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதைக் காட்டும் முக்கிய செய்தியாக இது பார்க்கப்படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *