எங்கள் கூட்டணி கட்சிகளுக்கு இடையில் இடைவெளிகள் இருந்தாலும், முரண்பாடுகள் இருந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் அவற்றை சரிசெய்து கொள்ள முடியும் – திருமாவளவன்!!

சென்னை:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக தலைமை யிலான கூட்டணி பல்வேறு கட்சிகளாக சிதறிக் கிடக்கிறது.

அவற்றை ஒன்று சேர்ப்பதற்கே அவர்கள் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் அதிமுக தலைமையிலான கூட்டணி ஒரு கூட்டணியாகவே வடிவம் பெறவில்லை. திமுக கூட்டணிக்கு தமிழக மக்கள் ஏகோபித்த ஆதரவை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

எண்ணற்ற புதிய திட்டங்கள், மக்கள் நலத்திட்டங்கள் உள்ளிட்டவற்றால் ஆதரவு பெருகுகிறது. சசிகலா கட்சி தொடங்குவது அவருடைய விருப்பம். அது அவரது அரசியல் தேவையை பொறுத்தது.

வருகிற 22-ம் தேதி முதல் கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என திமுக தலைவர் அறிவித்திருக்கிறார். ஒவ்வொரு தோழமைக் கட்சிகளாக அவர்கள் அழைப்பு விடுத்து பேசுகிறார்கள்.

காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து நான் கருத்து சொல்ல எதுவும் இல்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அப்படி எந்த ஊசலாட்டமும் இல்லை. நாங்கள் வலதுசாரி அரசியல் இந்த மண்ணில் வலுப்பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

எங்கள் கூட்டணி கட்சிகளுக்கு இடையில் இடைவெளிகள் இருந்தாலும், முரண்பாடுகள் இருந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் அவற்றை சரிசெய்து கொள்ள முடியும் என்று நம்புகிறோம்.

இதற்காக இந்த கூட்டணியின் நலன்கள் பாதிக்கப்படும் வகையில் எந்த முடிவையும் விசிக எடுக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *