மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் விடுவிப்பு!! உடைந்து அழுத கெஜ்ரிவால்!..

டெல்லி;
டெல்லியில் 2021இல் ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தபோது வகுக்கப்பட்ட புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது.
இதில் அப்போதைய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மனிஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

கெஜ்ரிவாலும், சிசோடியாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு நீண்ட மாதம் கழித்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இடையில் கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சியை பிடித்தது.

இந்த வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு:
தீர்ப்பளித்த டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜிதேந்திர சிங், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அரசுத் தரப்பில் எந்த ஆதாரமும் இல்லை. ஆம் ஆத்மி வகுத்த புதிய மதுபான கொள்கையில் சதி திட்டமோ குற்றவியல் நோக்கமோ இல்லை

ஆதாரங்களே இல்லாமல் சிபிஐயால் ஜோடிக்கப்பட்ட வழக்கு இது. எந்த குற்றமும் செய்யாமல் முதல்வராக இருந்த கெஜ்ரிவால் 156 நாள்களும், துணை முதல்வராக இருந்த சிசோடியா 530 நாள்களும் சிறையில் இருந்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்தார்.

எனவே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, தெலுங்கானா பிஆர்எஸ் முன்னாள் தலைவர் கே. கவிதா மற்றும் விஜய் நாயர், அபிஷேக் போயின்பள்ளி உள்ளிட்ட மொத்தம் 23 பேரையும் விடுவிக்க அவர் உத்தரவிட்டார்.

மேலும், வழக்கில் சாட்சியமோ, ஆதாரங்களோ இல்லாமல் நூற்றுக்கணக்கான பக்கங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டார்.

ஆனந்தக் கண்ணீர்:

தான் குற்றமற்றவர் என தீர்ப்பு வெளியானதும் கெஜ்ரிவால் நீதிமன்றத்திலேயே உணர்ச்சிவசப்பட்டு உடைந்து அழுதார். மணீஷ் சிசோடியா மற்றும் தனது வழக்கறிஞர் ஹரிஹரன் ஆகியோரைக் கட்டிப்பிடித்து தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”இந்த வழக்கு சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் சதி. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை அதிகாரத்திலிருந்து வெளியேற்ற பாஜக திட்டமிட்டது.


அதிகாரத்திற்காக யாரும் நாட்டுடனும் அரசியலமைப்புடனும் இந்த வழியில் விளையாடக்கூடாது. உண்மை வெல்லும் என்று நாங்கள் எப்போதும் கூறி வந்தோம். உண்மை வென்றது.

இந்தத் தீர்ப்பு சத்தியத்திற்கு கிடைத்த வெற்றி. என் மீதான அனைத்துப் பொய்க் குற்றச்சாட்டுகளும் இன்று தகர்ந்துவிட்டன” என்று தெரிவித்தார்.

தீர்ப்பு வெளியானவுடன் ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். சமூக வலைதளங்களில் இது நீதிக்குக் கிடைத்த வெற்றி என்று பலர் பதிவிட்டு வருகின்றனர்.


கெஜ்ரிவாலின் இந்த விடுதலை, டெல்லி அரசியலில் ஒரு பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கெஜ்ரிவால் மீதான இந்த ஊழல் வழக்கை முன்வைத்தே மேடை தோறும் பிரசாரம் செய்து பாஜக ஆட்சியை பிடித்தது.


இந்த தீர்ப்பு மூலம் கெஜ்ரிவால் மீண்டும் முழு வீச்சில் அரசியலில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தீர்ப்பு கெஜ்ரிவாலின் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *