புதுடெல்லி:
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று முன்தினம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.
நாளை (மார்ச் 1-ம் தேதி) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி, இரு முறை சாம்பியனான மேற்கு இந்தியத் தீவுகளை எதிர்கொள்கிறது. இது இரு அணிகளுக்குமே சூப்பர் 8 சுற்றில் கடைசி ஆட்டம் ஆகும்.
இந்த சுற்றில் இரு அணிகளும் தலா 2 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் தலா 2 புள்ளிகளை பெற்றுள்ளன. இதனால் கொல்கத்தா போட்டியில் வெற்றியை வசப்படுத்தும் அணியே அரை இறுதிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான சுனில் கவாஸ்கர் கூறியதாவது: ஒரு பேட்ஸ்மேனாக அபிஷேக் சர்மா எப்படி விளையாடக் கூடியவர் என நமக்குத் தெரியும்.
ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் 55 ரன்கள் விளாசியதன் மூலம், அவரது ஆட்டத்தின் மீது சந்தேகப்பட்டவர்களை அபிஷேக் சர்மா அமைதியாக்கியுள்ளார்.
ஜிம்பாப்வேவுக்கு எதிராக ரன்கள் குவிக்க அபிஷேக் சர்மா சிறிது நேரம் எடுத்துக் கொண்டார். சுழற்பந்து வீச்சை மதித்து விளையாடினார்.
தேவையின்றி எந்தவொரு ரிஸ்க்கான ஷாட்டுகளையும் முயற்சிக்காமல் அமைதியாக விளையாடினார். இந்தப் போட்டியில் அவர், தடுப்பாட்டத்தையும் வெளிப்படுத்தினார்.
அதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில், அபிஷேக் சர்மா இதுபோன்று விளையாடியதை நாம் வழக்கமாக பார்த்தது இல்லை. அபிஷேக் சர்மா நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டு வருகிறார் என நினைக்கிறேன்.
ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் இது போன்று தொடர்ச்சியாக ரன்கள் குவிக்க முடியாத சுழல் உருவாகும். ஆனால், அதிலிருந்து நாம் எவ்வளவு கற்றுக் கொள்கிறோம் என்பது மிகவும் முக்கியம்.
அபிஷேக் சர்மா நிறைய கற்றுக் கொண்டுள்ளதாக நான் உணர்கிறேன். இனிவரும் போட்டிகளில் அவர், தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடும்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி உடைந்தது. டாப் ஆர்டரில் வலதுகை, இடதுகை பேட்ஸ்மேன்கள் கூட்டணி தேவை என்பதை அவர்கள் உணர்ந்தனர்.
முந்தையஆட்டத்திலிருந்து கற்றுக்கொள்வது மிகவும் முக்கியமானது, அணியின் நலனுக்காக, சஞ்சு சாம்சன் பெரிய அளவிலான ஷாட்டை விளையாடி அவுட் ஆனார்.
அது பரவாயில்லை. ஏனென்றால் அவர், இந்திய அணிக்கு அற்புதமான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தார். டி20 உலகக் கோப்பை போன்ற தொடரில் அது முக்கியம். அற்புதமான தொடக்கம் அமைந்தால் மற்ற பேட்ஸ்மேன்கள் பந்தை அடித்து நொறுக்க நல்ல தளத்தை வழங்கும்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி முற்றிலும் மாறுபட்ட சவால்களை வழங்கும். அவர்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அவர்களின் பேட்ஸ்மேன்கள் சிறந்த ஃபார்மில் உள்ளனர்.
அவர்களின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். அவர்கள் எதிரணியின் தவறுகளை பயன்படுத்திக் கொண்டு சரியான நேரத்தில் தாக்குதல் ஆட்டம் தொடுப்பார்கள்.
மேற்கு இந்திய தீவுகள் அணியின் பேட்டிங் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியாவுக்கு ஒரு நல்ல திட்டம் தேவைப்படும்.
அவர்களின் பேட்ஸ்மேன்கள் முதல் பந்திலிருந்தே அடிக்கத் தொடங்குவார்கள். அவர்கள், காத்திருக்க மாட்டார்கள். இவ்வாறு சுனில் கவாஸ்கர் கூறினார்.