சென்னை:
இந்த உலகக் கோப்பை டி20 தொடர் தொடங்கும் முன் இந்திய அணித் தேர்வுக் குழுவினர் தொடக்க இடத்தில் சஞ்சு சாம்சனை நினைத்துப் பார்க்கவில்லை; அபிஷேக், இஷான் கிஷன் என்ற அதிரடி வீரர்களே தெரிவுக்குச் சென்றனர்.
ஆணவம் தலைதூக்கச் செய்த இந்தத் தெரிவை சஞ்சு சாம்சன் தன் ஆல் டைம் கிரேட் இன்னிங்ஸ் மூலம் இப்போது கேள்விக்குட்படுத்தியுள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் நேற்று இந்திய அணி சேஸ் செய்த 195 ரன்கள்தான் இதுவரையில் வெற்றியின் உச்சபட்ச விரட்டல்இலக்காகும். இதைச் சாதித்தவர் சஞ்சு சாம்சன்.
கோலியின் நிதானத்துடனும் உத்தியுடனும், கோலி போலவே கள இடைவெளிகளில் பந்தைச் செலுத்தும் அபாரத் திறமையும் அவ்வப்போது ரோஹித் சர்மா, தோனியின் அதிரடி மட்டை வீச்சையும் வெளிப்படுத்தினார். சஞ்சு இனி தான் அணிக்குத் தேவையா இல்லையா என்ற பேச்சுக்கே இடமில்லை.
அது கம்பீராக இருந்தாலும் சூரியகுமார் யாதவ்வாக இருந்தாலும் சரி, அஜித் அகர்க்கராக இருந்தாலும் சரி.
தன் மட்டையினால் அவர்களுக்குக் கொடுத்த பதிலடிதான் இந்த வெற்றி இன்னிங்ஸின் அடி.
கம்பீர் அண்ட் கோ சஞ்சுவை சந்தேகத்துடன் அணியில் எடுத்தும், உட்காரவைத்தும் கொண்டே இருந்தனர்.
இத்தனையிலும் அவர் மனம் உள்ளுக்குள் கொதிப்படைந்தாலும் அந்தக் கொதிப்பு ஆட்டத்தில் கட்டுக்கோப்பற்ற ஆக்ரோஷமாகாமல், இன்னும் உறுதியான ஆக்ரோஷமாக, அமைதியான ஆக்ரோஷமாக அவரிடம் மாற்றத்தை ஏற்படுத்தியது.
பந்து வந்த பிறகு ஆடுவது என்பதிலிருந்தே அவரது உறுதி நேற்று தெரிந்தது. அவருக்கும் முக்கியமான போட்டி, இந்திய அணிக்கும் இது ஒரு காலிறுதி நாக் அவுட் போட்டி போன்றதே.
சஞ்சு சாம்சன் ஏற்கெனவே 17 ரன்கள் அடித்த ஓவரில் அபிஷேக் சர்மா சிந்தனையின்றி அந்த ஷாட்டுக்குச் சென்று ஆட்டமிழந்தார்.
அதேபோல் இஷான் கிஷனும் ஹோல்டரை ஜாக்கிரதையாக ஆடாமல் பவுன்ஸ் கூடுதல் செய்யும் பவுலரான அவரின் சற்றே எழும்பிய பந்தை பவுண்டரியில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
சூரியகுமார் யாதவ் அவுட் ஆகும்போது 10 ஓவர் 99/3 என்று அந்த நேரத்தில் இன்னும் ஒன்றிரண்டு விக்கெட்டுகள் போயிருந்தால் இந்திய அணி காலியாகியிருக்கும். ஆனால், சஞ்சு சாம்சன் நேற்று அவுட் ஆகும் மூடில் இல்லை.
ஜேசன் ஹோல்டர் பந்தை அதிகம் எழுப்பி பாயிண்ட்டிலும் ஸ்கொயர்லெக் பவுண்டரியிலும் நல்ல தடுப்பு உத்தியுடன் வீசிக் கொண்டிருக்க சஞ்சு ஆடிய விதம் ஆச்சரியத்தகுந்த சிந்தனை ஆட்டம் ஆகும்.
பின்னால் சென்று மட்டையை படுக்கை வசமாக வைத்து பவுலருக்கும் மிட் ஆஃப்புக்கும் இடையே பளார் என்று அறைந்த ஷாட் உண்மையில் கோலி போன்ற திறமையான ஒரு வீரரை அணியில் எடுத்தும் எடுக்காமலும் போட்டு இப்படி படுத்தி எடுக்கின்றனரே என்ற கோபம்தான் வந்தது.
“ஜிம்பாப்வேவுக்கு எதிரான சென்னை போட்டியில் இலக்கை நிர்ணயிக்க வேண்டும்; அதனால் முதல் பந்திலிருந்தே அடிக்க வேண்டும் என்று இறங்கினேன், நேற்று அப்படியல்ல.
அடிக்கப் போகும்போது விக்கெட்டுகள் இழக்கப்பட்டன. ஆகவே நான் கூட்டணிகளைக் கட்டமைக்க விரும்பினேன் என் பேட்டிங் நடைமுறையில் கவனம் செலுத்தி ஆடினேன்” என்றார் சாம்சன்.
கிரீசில் பந்து வருவதற்கு முன் காலை நகர்த்துவதில் சிறு மாற்றத்தைச் செய்துள்ளார் சஞ்சு. பந்துக்கு கொஞ்சம் முன் கூட்டியே தயாராகி விடுகிறார். இது ஷார்ட் பிட்ச் பந்துகளைக் கையாள்வதில் அவருக்கு பேருதவி புரிந்துள்ளன.
அரையிறுதிக்கு முன்னர் சஞ்சுவின் இத்தகைய இன்னிங்ஸ் இந்திய அணிக்குப் பெரும்பலம், சஞ்சுவின் சொந்த பேட்டிங்கிற்கும் பெரும் பலம்.
அனைத்தை விடவும் இது அவரது கரியரின் திருப்புமுனை இன்னிங்ஸாக இருக்கலாம். மார்க்ரம் இப்படித்தான் திடீரென ஒரு இன்னிங்ஸ் மூலம் சீரான முறையில் ரன்களைக் குவிக்கும் வீரராக இப்போது திகழ்கிறார்.
அதேபோல் சஞ்சுவும் இனி இந்திய டி20 அணியில் இன்னும் சில காலம் ஆடுவார், அப்படியே இதே ஆட்டத்தை வளர்த்தெடுத்துக் கொண்டால் ஒருநாள் போட்டிகளிலும் அவர் வரக்கூடும்.
கம்பீர் அண்ட் கோவிற்கு இனி சாய்ஸ் இல்லை. சஞ்சுவை இனி உட்கார வைக்க முடியாது.