சென்னை:
மரபுவழி, நவீன பாணி ஓவியம் மற்றும் சிற்பக்கலைகளில் சிறந்த கலைஞர்களுக்கு கலைச் செம்மல் விருதுகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை சார்பில் ஒவ்வோர் ஆண்டும் மரபுவழி, நவீன பாணி ஓவியம் மற்றும் சிற்பக் கலைகளில் திறமையான கலைஞர்களுக்கு ‘கலைச்செம்மல்’ விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
இந்த விருது ரூ.1 லட்சம் பரிசு, செப்புப் பட்டயம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஆண்டுதோறும் 6 புகழ்பெற்ற கலைஞர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் 2025-26-ம் ஆண்டுக்கான கலைச்செம்மல் விருதுக்கு மரபுவழி ஓவியப் பிரிவில் மா.பாலசுப்ரமணியன், மரபுவழி சிற்பப் பிரிவில் தே.கண்ட ஸ்தபதி மற்றும் தஉ.பத்மநாபன், நவீன பாணி ஓவியப் பிரிவில் கோ.வில்வநாதன் மற்றும் மு.ராஜா, நவீன பாணி, சிற்பப் பிரிவில் ச.சாந்தி ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர்.
அவர்களுக்கு தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கலைச் செம்மல் விருதுகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலர் டாக்டர் க.மணிவாசன், கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் எஸ்.
வளர்மதி, இணை இயக்குநர் ஜெ.கார்குழலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.