காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவிப்பு!

சென்னை:
காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவிக்கப்பட்டுள்ளார். திருச்சியை சேர்ந்த இவர், காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளராக உள்ளார்.

தமிழகத்தில் 6 மாநிலங்களவை இடங்கள் காலியாகிறது. இதில் 4 இடங்கள் திமுகவுக்கும், 2 இடங்கள் அதிமுகவுக்கும் கிடைக்கும்.

திமுக தனது 4 இடங்களில் ஓர் இடத்தை காங்கிரஸ் கட்சிக்கும், இன்னொரு சீட்டை தேமுதிகவுக்கும் ஒதுக்கியது. மீதமுள்ள இரு இடங்களில் திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மாநிலங்களவைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இந்தச் சூழலில், காங்கிரஸ் சார்பில் தமிழகத்திலிருந்து கிறிஸ்டோபர் திலக் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.

திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் திலக், காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளராகவும், மணிப்பூர், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கான காங்கிரஸ் பொறுப்பாளராகவும் உள்ளார்.

ராகுல் காந்தியின் நம்பிக்கையை பெற்ற இவர், இளம் தலைமுறை காங்கிரஸ் தலைவர்களில் முக்கியமானவராக உள்ளார்.

தமிழகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான சுதர்சன நாச்சியப்பன், திருநாவுக்கரசர், தங்கபாலு உள்ளிட்டோர் ராஜ்யசபா சீட்டை பெற தீவிரமாக முயற்சித்த நிலையில், இளம் தலைமுறையை சேர்ந்த கிறிஸ்டோபர் திலக்குக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *