கோவை:
கோவை நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள பார்சன் குடியிருப்பில் வசித்தவர் கோபாலன் குட்டி மனைவி கஸ்தூரி (வயது82). கோபாலன் குட்டி இறந்துவிட்ட நிலையில் கஸ்தூரி தனது மகனான ஆயுர்வேத டாக்டர் ராம்குமார் குட்டி என்பவருடன் இந்த வீட்டில் வசித்து வந்தார்.
ராம்குமார் குட்டி தனது தாயார் கஸ்தூரியை பராமரித்து கொள்ள நேபாள நாட்டை சேர்ந்த சுர்ஜா என்ற வேலைக்கார பெண்ணை நியமித்து இருந்தார்.
கடந்த 4 மாதமாக சுர்ஜா கஸ்தூரியை பராமரித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை கஸ்தூரி வீட்டில் உள்ள படுக்கையறை கட்டிலில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் வாயில் துணி வைத்து அடைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இந்த கொலை சம்பவம் குறித்து கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் கார்த்திகேயன், உதவி போலீஸ் கமிஷனர் வசந்தராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கஸ்தூரி வீட்டில் இருந்து சுர்ஜா உடன் ஒரு ஆணும் வெளியேறும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
விசாரணையில், வேலைக்கார பெண் சுர்ஜா மற்றும் ஒரு ஆண் சேர்ந்து கஸ்தூரியை கொலை செய்து நகையை திருடிவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் தெரியவந்தது.
கடந்த 4 மாதத்திற்கு முன்பு வேலைக்கு சேர்ந்த சுர்ஜா, கஸ்தூரியின் வீட்டில் அதிக நகை, பணம் இருக்கும் என்று எதிர்பார்த்து, அதை கொள்ளையடிக்க கூட்டாளிகளுடன் திட்டம் போட்டு இருக்கிறார்.
இந்த நிலையில், கடந்த மாதம் 28-ந் தேதி கஸ்தூரியின் மகன் டாக்டர் ராம்குமார் குட்டி வெளிநாடு சென்று விட்டார்.
இதனால் சுர்ஜா கஸ்தூரியின் வீட்டில் கொள்ளையடிக்க திட்டம் போட்டார். இதற்காக அவர் தனது கணவரை திட்டமிட்டு நேற்று முன்தினம் கோவைக்கு வரவழைத்துள்ளார்.
இந்த நிலையில், கஸ்தூரி சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து சிங்காநல்லூரில் வசிக்கும் தனது மகள் சுஜாதா வீட்டிற்கு காரில் சென்றார். அப்போது வேலைக்கார பெண் சுர்ஜாவும் அவருடன் காரில் சென்றுள்ளார். அதன்பிறகு 2 பேரும் இரவு 7 மணிக்கு அங்கிருந்து வீட்டிற்கு வந்தனர்.
அதன்பிறகு சுர்ஜா தனது கணவரை தொடர்பு கொண்டு கஸ்தூரியின் வீட்டிற்கு வருமாறு தெரிவித்துள்ளார்.
பின்னர் இரவு 12 மணிக்கு 2 பேரும் சேர்ந்து கஸ்தூரியின் வாய் மற்றும் கை கால்களை சேலை, துப்பட்டா, துண்டு மூலம் கட்டி கொலை செய்துள்ளனர்.
பின்னர் அவர்கள் வீட்டில் நகை, பணம் இருக்கிறதா என தேடியுள்ளனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த நகை, பணம் கிடைக்கவில்லை.
இதனால் கஸ்தூரி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை கொள்ளையடித்து விட்டு 2 பேரும் குடியிருப்பின் சுற்றுச்சுவரை தாண்டி குதித்து தப்பி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில் தப்பி சென்ற வேலைக்கார பெண் சுர்ஜா மற்றும் அவரது கணவரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
தனிப்படை போலீசார் பெங்களூரு, சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுள்ளனர்.
அங்கு பல்வேறு குழுக்களாக பிரிந்து தனிப்படை போலீசார் 2 பேரையும் தேடி வருகிறார்கள்.
சுர்ஜாவை பிடித்தால் தான் கொலை பற்றிய முழு விவரமும் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம் என்று போலீசார் தெரிவித்தனர்.