பந்தலூர்:
பந்தலூர் அருகே தமிழக பகுதியை கேரள மாநிலம் உரிமை கொண்டாடி அறிவிப்பு பலகை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அறிவிப்பு பலகையை அகற்ற கோரியுள்ளதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தமிழக, கேரள எல்லையாக தாளூர் பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு பாலம் இரு மாநிலங்களையும் பிரிக்கிறது. இந்நிலையில், இப்பகுதியில் கேரள மாநில பொதுப்பணி துறை சார்பில் கேரளா உங்களை வரவேற்கிறது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு பகுதியை கேரள மாநிலம் சொந்தம் கொண்டாடுவதாகக் கூறி அப்பகுதி மக்கள் அங்கு திரண்டதாக பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனால், இரு மாநில போலீஸாரும் அங்கு குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மக்களிடம் வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
கடந்த 2018-ம் ஆண்டு தமிழக பகுதியில் கேரளம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. கேரள நெடுஞ்சாலை துறையினர் அப்பகுதி கேரளாவைச் சேர்ந்தது என்று குறிக்கும் வகையில் சிவப்பு கோடு போட்டனர்.
மேலும், ‘நென்மேணி ஊராட்சி உங்களை வரவேற்கிறது’ என்று தமிழக எல்லையில் அறிவிப்பு பலகை வைத்தனர். இதை அறிந்த நாம் தமிழர் கட்சியினர் நீலகிரி ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
இந்நிலையில், இப்பிரச்சினை மீண்டும் எழுந்துள்ளது. தற்போது மீண்டும் கேரள மாநிலம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யாவிடம் கேட்டபோது, ‘தமிழ்நாடு எல்லையான தாளூரில் கேரளாவின் வயநாடு மாவட்ட எல்லையும் உள்ளது.
அப்பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டதால் பிரச்சினை எழுந்துள்ளது. இதுகுறித்து வயநாடு ஆட்சியரிடம் பேசியுள்ளோம். ஏற்கெனவே இருந்த அறிவிப்பு பலகைக்கு பதிலாக புதிய பலகை வைத்துள்ளனர். அதை அகற்ற கூறியுள்ளோம்.
இந்த பிரச்சினை தொடர்பாக இரு மாநிலம் சார்பில் டிஜிட்டல் சர்வே செய்யப்படவுள்ளது. அதுவரை முன்பிருந்த நிலையே தொடர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு மாநிலங்கள் சார்பில் சர்வே முடிந்ததும் எல்லை குறித்து முடிவு செய்யப்படும்’ என்றார்.