விஜயகாந்தின் பல வருட கனவு நனவாகியிருப்பதாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்வான எல்.கே சுதீஷ் நெகிழ்ச்சி!!

விஜயகாந்தின் பல வருட கனவு நனவாகியிருப்பதாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்வான எல்.கே சுதீஷ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை நேற்று பெற்றுக் கொண்ட தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த நேரத்தில் எங்களின் பொதுச்செயலாளர் பிரேமலதா, முதல்வர் ஸ்டாலினுக்கு எனது நன்றிகள்.

கண்டிப்பாக பாராளுமன்றத்திற்கு சென்று என்னால் முடிந்தவரை மக்களுக்கு நல்லது செய்வேன், மக்களுக்காக பாடுபடுவேன். விரைவில் திமுக தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை குழுவுடன் பேசி எத்தனை தொகுதிகள் மற்றும் எந்தெந்த தொகுதிகள் என்பதனை முடிவு செய்வோம்.

அதன் பிறகு அறிவிப்பு வெளியாகும். தேமுதிக நாடாளுமன்றத்துக்கு செல்ல வேண்டும் என்பது விஜயகாந்த் கனவு. விஜயகாந்த்தின் இருபது வருட கனவு தற்போது நனவாகி இருக்கின்றது.

தொடர்ந்து நான்கு முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு இருக்கின்றோம்.

தற்போது தான் முதல்முறையாக பாராளுமன்றத்திற்கு நாங்கள் செல்கின்றோம். மக்களுக்கு தேவையான விஷயங்களை நான் செய்து காட்டுவேன். 2006-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டேன்.

அதனைத் தொடர்ந்து 2009 தேர்தல், 2014 மற்றும் 2019 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டுளேன். பல தேர்தல்களை சந்தித்து இருக்கின்றேன்.

கண்டிப்பாக இம்முறை எங்களுடைய கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெரும். எங்கள் கூட்டணியின் தலைவர் ஸ்டாலின் தான் மீண்டும் முதல்வராவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானதற்கான சான்றிதழை விஜயகாந்த் நினைவிடத்தில் வைத்து ஆசி பெற்ற சுதீஷ், தொடர்ந்து அங்கிருந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *