எந்தப் பெருமையும் தமிழர்களுக்கு இருக்கக் கூடாது என நினைக்கிறது பாஜக – சீமான்!!

சிவகங்கை;
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அரியக்குடியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திமுக அரசுக்கு நிதி மேலாண்மை இல்லை; ஏற்கெனவே ரூ.10 லட்சம் கோடி கடன் உள்ளது. தேர்தலில் வாக்குகளை அறுவடை செய்யவே அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது மேலும் கடன் சுமையை அதிகரிக்கும். ஜாக்டோ-ஜியோவிடம் பல லட்சம் வாக்குகள் இருப்பதால் அவர்களது கோரிக்கையை அரசு ஏற்றுள்ளது.

சம ஊதியம் கேட்டுப் போராடும் ஆசிரியர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கும் வலுவான அமைப்பு இல்லாததால் அவர்களது கோரிக்கையை அரசு ஏற்காது. அரசு கடன் வாங்கியும் எந்த விஷயத்தையும் சரியாகச் செய்யவில்லை என்றுதான் வருத்தம்.

யாரும் ஆயிரம் ரூபாய் கேட்டு போராடவில்லை. ஆனால், அதை அறிவித்தது வாக்குப் பறிப்புத் திட்டம்தான்.

பாஜகவினர் மோடி பொங்கல் என்று கூறினால், ஓடிப் போங்கள் என்று பதிலுக்கு கூற வேண்டியதுதான். எந்தப் பெருமையும் தமிழர்களுக்கு இருக்கக் கூடாது என நினைக்கிறது பாஜக.

தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. கருத்துக் கணிப்பு மீது எங்களுக்கு உடன்பாடு இல்லை. இது கருத்துத் திணிப்பு.

நாங்கள் வாங்கும் வாக்கு மட்டுமே உண்மையான வாக்கு; மற்ற கட்சிகள் வாங்கும் வாக்குகள் அனைத்தும் பணம் கொடுத்து வாங்குபவைதான்.

தேர்தல் அறிக்கைகள் பயனற்றவை. ஆட்சி எப்படி நடத்துவது என்பது குறித்த செயல்பாட்டு வரையறையைத்தான் நாங்கள் வெளியிடுவோம்.

ஊழல், லஞ்சம், தீண்டாமை, பெண் அடிமைத்தனம் இல்லாத ஒரு புதிய நாட்டை உருவாக்க வேண்டும் என்பதுதான் எங்களது இலக்கு. வடமாநிலத்தவர்கள் அதிகளவில் தமிழகத்துக்கு வருவதால், இந்தி பேசுவோரிடம் ஆட்சி அதிகாரம் செல்லும்.

மத்திய ஆட்சி அதிகாரத்தில் பங்கு இருப்பதுபோன்று, ஆட்சியில் பங்கு என்று விஜய் அறிவித்ததில் தவறில்லை.

இது விஜயின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. இது வரவேற்கத்தக்கது. பிப்.21-ம் தேதி அனைத்து வேட்பாளர்கள் பெயரும் அறிவிக்கப்படும். கூட்டணி என்பது எப்போதும் கிடையாது.

தனித்து தான் போட்டியிடுவோம். தமிழக அரசியலில் நாதக வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தி வருகிறது. வெற்றிபெற கொஞ்ச காலம் எடுக்கும். மக்கள் நினைத்தால் நிச்சயம் மாற்றம் வரும்.

2026 சட்டப்பேரவைத் தேர்தல் எங்களுக்கு எந்த சவாலும் இல்லை.பொதுத் தொகுதியில் தாழ்த்தப்பட்டவரை நிறுத்தி திமுக வென்று காட்டுமா? திருமாவளவனை பொதுத்தொகுதியில் நிறுத்தி திமுக வெற்றி பெற வைக்குமா? மருத்துவமனையில் குடிக்கிறார்கள் என்று செய்திகள் வருகிறது.

அரசு மதுபானம் விற்கும்போது, மருத்துவமனையில் குடிக்கத் தான் செய்வார்கள். இதில் என்ன நடவடிக்கை எடுப்பது. இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *