ஊட்டியில் கேன்களில் பதுக்கிய 200 லிட்டர் பெட்ரோல்-டீசல் பறிமுதல்!!

ஊட்டி:
நீலகிரி மாவட்டம் உதகை அருகே கேத்திபாலடா பகுதியில் உள்ள ஒரு சிறிய கடையில் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட வழங்கல் அதிகாரியின் உத்தரவின்படி பறக்கும் படை அதிகாரி ஜவகர் தலைமையில் அந்தக் கடையில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.


அப்போது கடையின் திரைமறைவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் கேன்களில் பெட்ரோல் மற்றும் டீசல் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்து அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து நடத்திய சோதனையில் சுமார் 200 லிட்டர் அளவிலானபெட்ரோல் மற்றும் டீசல் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கடை உரிமையாளரிடம், அதிகாரிகள் விசாரித்தபோது, அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காகவே எரிபொருட்களை வாங்கி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.


இதையடுத்து அதிகாரிகள் அந்த எரிபொருள் கேன்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளரிடம் மேலான விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்தனர்.

தற்போது பெட்ரோல் தட்டுப்பாடு நிலவுகின்ற சூழலில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக எரிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு, அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *