கோவை:
இறுதி வாக்காளர் பட்டியல் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் 10 சட்டப் பேரவை தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 13,00,889 ஆண்கள், 13,95,396 பெண்கள், 528 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 26 லட்சத்து 96 ஆயிரத்து 813 வாக்காளர்கள் உள்ளனர்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி, கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த வரைவு வாக்காளர் பட்டியல் அடிப்படையில் அப்பொழுது 25,74,608 வாக்காளர்கள் இருந்தனர்.
அதனை தொடர்ந்து வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, நீக்க சிறப்பு முகாம் நடத்தப்பட்டன. சிறப்பு திருத்த பணிகள் அனைத்தும் முடிவடைந்து இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (பிப்.23) வெளியிடப்பட்டது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், கோவை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான பவன் குமார் கிரிப்பனவர் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். கூடுதல் தேர்தல் அலுவலர் சிவகுரு பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கோவை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் மொத்தம் 26 லட்சத்து 96 ஆயிரத்து 813 வாக்காளர்கள் உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் 2025-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி முதல் 2026 ஜனவரி 30ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க நீக்க சிறப்புமாக நடத்தப்பட்டன.
அதில் பெயர் சேர்க்க 77,766 ஆண்கள், 86,723 பெண்கள், 29 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 1,64,518 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 42,313 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியல் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் 10 சட்டப் பேரவை தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 13,00,889 ஆண்கள், 13,95,396 பெண்கள், 528 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 26 லட்சத்து 96 ஆயிரத்து 813 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் மேட்டுப்பாளையம் தொகுதியில் 2,79,438 வாக்காளர்கள், சூலூர் தொகுதியில் 3,03,541 பேர், கவுண்டம்பாளையம் பகுதியில் 4,07,507 பேர், கோவை வடக்கு தொகுதியில் 2,91,533 பேர், தொண்டாமுத்தூர் தொகுதியில் 2,87,442 பேர், கோவை தெற்கு தொகுதியில் 1,86,509 பேர், சிங்காநல்லூர் தொகுதியில் 2,66,058 பேர், கிணத்துக்கடவு தொகுதியில் 3,00,486 பேர், பொள்ளாச்சி தொகுதியில் 2,02,015 பேர், வால்பாறை தொகுதியில் 1,72,284 வாக்காளர்கள் உள்ளனர்.
சிறப்பு திருத்தப் பணிக்கு முன்பு கோவை மாவட்டத்தில் மொத்தம் 3,117 வாக்குச்சாவடிகள் இருந்தன. 1,200 வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு புதிதாக 446 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டு தற்போது மொத்தம் 3,563 வாக்குச்சாவடிகள் உள்ளன.