நாம் புதிய கட்சியை தொடங்கி இருக்கிறோம்; இருவரது வழியில் சரியாக பயணித்து கொண்டிருக் கிறோம் – இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் சசிகலா….

திண்டிவனம்

திண்டிவனத்தில் நேற்று மாலை நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பங்கேற்றார்.

அப்போது அவர், “திமுகவை உறுதியுடன் எதிர்க்கிறவர்கள், எம்ஜிஆர் கொள்கைகளை காப்பாற்றுபவர்கள், ஜெயலலிதாவின் எண்ணங்களை ஈடேற்றுபவர்கள் தான் நம் இரு தலைவர்களின் வழியில் வந்தவர்கள். இதற்காகதான், நாம் புதிய கட்சியை தொடங்கி இருக்கிறோம்.

இருவரது வழியில் சரியாக பயணித்து கொண்டிருக்கிறோம். அவர்களை போன்று சிறுபான்மையினர் மற்றும் அனைத்து சமுதாயத்தினரை அரவணைத்து செல்வோம்” என பேசியவர், ‘கரை சேர நினைத்த மனிதர்களின் கதை’ என்ற தலைப்பில் ஒரு குட்டிக் கதையை சொன்னார்.

ஒரு ஊரில் உள்ள ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இக்கரையில் இருவர் நிற்கின்றனர். அடுத்த கரைக்கு செல்ல ஓடம் இல்லை.

அப்போது அந்த இடத்துக்கு வந்த ஒரு காளை மாடும், அக்கரைக்கு செல்ல வேண்டும். காளை மாட்டுக்கு ஓடம் தேவை இல்லை. ஆற்றில் பாய்ந்து, நீந்தியது.

இதைப் பார்த்த ஒருவர், திடீரென ஆற்றில் குதித்து, காளை மாட்டின் வாலை கெட்டியாக பிடித்து கொண்டார். காளை மாடும், அவரை சுலபமாக இழுத்து சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது. அடுத்தவர் , ‘நமக்கு ஒரு வால் கிடைக்காதா?’ என எதிர்பார்த்தார்.

அப்போது ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இதைப் பார்த்த மற்றொருவர், நாயின் வாலை பிடித்துக் கொண்டு செல்ல முயன்றார். மனிதரை இழுத்து கொண்டு ஆற்றில் நீந்த முடியாமல் நாய் திணறியது.

இருவரும் மாற்று திசையில் சென்றனர். இதில் மூன்றாவதாக ஒருவர் இருக்கிறார், எப்போதும் தவறாகவே முடிவு செய்பவர்.

ஆற்றின் நடுவே மிதந்த கம்பளி மூட்டை போன்ற ஒன்றை நோக்கி, ஏதோ பொருள் இருக்கும் என்ற ஆசையில் நீந்தி சென்றார். நீண்ட நேரமாகியும் கரை திரும்பவில்லை. நடு ஆற்றில் போராடுகிறார். கம்பளி மூட்டை என நினைத்து கரடியைப் பிடித்து விட்டேன் என சத்தம் போடுகிறார்.

தவறாக பற்றி கொள்பவர்கள் தடுமாறிவிடுகின்றனர். சரியாக பற்றி கொள்பவர்கள் கரை ஏறி விடுகின்றனர்.

நல்ல வேளை நீங்கள் நாய் வால் மற்றும் கரடி குட்டியை பிடிக்கவில்லை. காளையின் வாலை நீங்கள் பிடித்து கொண்டு இருக்கிறீர்கள்.

கண்டிப்பாக கரை சேர்ந்து விடுவீர்கள்” என்று கதை சொல்லி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை மறைமுகமாக சாடினார்.

தொடர்ந்து பேசியவர், “மக்களின் ஆதரவுடன் தேர்தலில் வெற்றி வாகை சூடுவோம்” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *