சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் டிஇஓ ஜெ.குமரகுருபரன் ஆலோசனை!!

சென்னை:
சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் (டிஇஓ) ஜெ.குமரகுருபரன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் எதிர்வரும் 2026 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தி கண்காணிக்க தேர்தல் இணைப்புப் பொறுப்பாளர்கள் (Nodal Officers) நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு, வீடியோ கண்காணிப்புக் குழு மற்றும் வீடியோ பார்வையிடும் குழு ஆகியவற்றின் மூலம் சென்னை மாவட்டம் முழுவதும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்களில் நாளொன்றுக்கு தலா 3 குழுக்கள் வீதம் சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

3 நபர்கள் அடங்கிய வீடியோ கண்காணிப்புக் குழு தயார்நிலையில் இருக்கவும், இந்தக் குழுக்கள் ஒவ்வொரு நாளும் களப்பணியில் இருந்து, சட்ட விதிமீறல்கள் ஏதேனும் இருப்பின் அதன் மீது நடைமுறையில் உள்ள சட்டப்படி நடவடிக்கை எடுத்து, அதை உயர்நிலை அலுவலர்களுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் செலவின கண்காணிப்புக்காக தேர்தல் கைப்பற்றுகை மேலாண்மை அமைப்பு (Election Seizure Management System) 20-க்கும் மேற்பட்ட வெவ்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள் மூலம் செயல்பட உள்ளது குறித்து விளக்கப்பட்டது.

மேலும் சி-விஜில் (C-VIGIL) என்ற பொதுமக்கள் கண்காணிப்பு செயலி மூலம் பொது மக்களிடமிருந்து பெறப்படும் புகார்களுக்கு உடனடியாக தீர்வுகாண நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் க.கற்பகம், மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்)பூஷ்ணாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *