ஒரு சாமானியரும் தலைவராகும் ஜனநாயக சூழல் இருப்பதால் தான் அதிமுகவை தேர்வு செய்து இருக்கிறேன் – காளியம்மாள் பேட்டி!!

சென்னை:
“ஒரு சாமானியரும் தலைவராகும் ஜனநாயகம் அதிமுகவில் உள்ளது” என அதிமுகவில் இணைந்த நாதக முன்னாள் நிர்வாகி காளியம்மாள் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள் சென்னையில் இன்று (மார்ச் 13) காலை எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

அவருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பும், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “அதிமுகவை தேர்வு செய்ததற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் தலைமை பொறுப்புக்கு எளிய குடும்பத்தில் இருந்து வந்துள்ளார்.

ஒரு சாமானியரும் தலைவராகும் ஜனநாயக சூழல் இருப்பதால் தான் அதிமுகவை தேர்வு செய்து இருக்கிறேன். ஒரு தமிழனின் தலைமையின் கீழ் இயங்க அதிமுகவில் இணைந்துள்ளேன்.

ஒட்டுமொத்தமாக அனைத்து மக்களும் சேர்ந்து இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். இந்த முடிவை நான் தனித்து எடுக்கவில்லை.

மக்கள் ஒவ்வொரு நாளும் பிரச்சினைகளை சந்தித்து கொண்டுதான் இருக்கிறார்கள். விலைவாசி உயர்வு, பெண்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகிய பல பிரச்சினைகளை மக்கள் சந்தித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

மாற்றம் வராதா என எதிர்பார்க்கிறார்கள். வரவிருக்கும் தேர்தல் அதற்கான பரிசை தரும்.

அரசியல் கட்சியிலிருந்து விலகினாலும் மக்கள் அரசியலிலிருந்து விலகவில்லை. எனது குழந்தைகளுடன் நேரம் செலவிட விரும்பினேன்.

நாம் தமிழர் கட்சியில் செயல்படுவதற்கு முன்பு 2010-ம் ஆண்டில் அதிமுகவில் ஏற்கெனவே செயல்பட்டுள்ளேன். 2010ல் அதிமுகவில் மாவட்ட பொறுப்பில் இருந்துள்ளேன். எனக்கு பொறுப்பு வழங்குவது குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனைகள் கடுமையாக்க வேண்டும். அதுவரை இந்த தவறுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

மீண்டும் அந்தத் தவறை செய்யும் போதும் பயம் வரும் அளவுக்கு தண்டனைகளை கடுமையாக்க வேண்டும்.

அப்போது தான் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் குறையும்” இவ்வாறு காளியம்மாள் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *