மும்பை:
சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினால், அவரால் ஆட்டத்தின் முதல் 6 ஓவர்களிலேயே போட்டியை வென்று கொடுக்க முடியும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பாராட்டு தெரிவித்தார்.
கடந்த 8-ம் தேதி நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி, நியூஸிலாந்தை வென்று கோப்பையைக் கைப்பற்றியது. 3-வது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்திருந்தது.
டி20 உலகக் கோப்பையின் கடைசி 3 போட்டிகளில் இந்திய தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி அரை சதங்களை விளாசினார். முக்கியமான போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு ரன்கள் குவித்த சஞ்சு சாம்சனுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில், சஞ்சு சாம்சனை, கவுதம் கம்பீர் பாராட்டிப் பேசியுள்ளார். இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் கவுதம் கம்பீர் கூறியதாவது:
தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் மிகவும் திறமை வாய்ந்தவர்.
அதிரடி ஆட்டத்தால், ஆட்டத்தின் போக்கையை மாற்றக்கூடியவர். சஞ்சு சாம்சனால் என்ன செய்ய முடியும் என்பது நமக்குத் தெரியும். அவரது திறமை மீது ஒருபோதும் எனக்கு எந்த வொரு சந்தேகமும் இருந்ததில்லை.
அவர் அதிரடியாக விளையாடினால், அவரால் ஆட்டத்தின் முதல் 6 ஓவரிலேயே போட்டியை வென்று கொடுக்க முடியும். அந்த அளவுக்கு அசாத்திய திறமையையும், மன உறுதியையும் படைத்தவர் அவர்.
உடற்பயிற்சி கூடத்தில் நாங்கள் இருவரும் ஒன்றாக பயிற்சி மேற்கொள்வோம். அப்போது, ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் நீங்கள் விளையாடுகிறீர்கள் என்பதை சஞ்சு சாம்சனிடம் கூறினேன்.
எங்களுக்கு இடையேயான உரையாடல் இவ்வாறுதான் இருக்கும். டாப் ஆர்டரில் மூன்று இடதுகை பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள் என்பது குறித்து நிறைய விமர்சனங்கள் இருந்தது எனக்குத் தெரியும். ஆனால், டாப் ஆர்டரில் 3 இடதுகை பேட்ஸ்மேன்கள் இருப்பதால் அணியில் மாற்றம் செய்யவில்லை.
சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷானை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா, ஷிவம் துபே, அக்சர் படேல் என பேட்டிங் வரிசை பலமாக இருப்பதால் நமக்கு அதிக வாய்ப்பு இருந்தது.
அதிரடியாக விளையாடக் கூடிய பார்ட்னர்ஷிப் அமையவேண்டும் என்பதற்காகவே டாப் ஆர்டரில் மாற்றம் செய்தோம். முதல் 6 ஓவர்களில் அதிரடியாக விளையாட வேண்டும் என்பதற்காகவே சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார்.
டி20 உலகக் கோப்பையில் அவரது கடைசி 3 போட்டிகளிலும் திறமையாக செயல்பட்டு ரன்களைக் குவித்தார். உலகக் கோப்பையை வென்றதற்கு சஞ்சுவின் ஆட்டம் முக்கியமான காரணிகளில் ஒன்றாக அமைந்தது.
இவ்வாறு அவர் தெரிவித்தார். ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி மூன்று ஆட்டங்களில் சஞ்சு சாம்சன் 97*, 89, 89 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றி தேடித் தந்தது குறிப்பிடத்தக்கது.
‘அபிஷேக் சர்மா அவுட் ஆஃப் பார்மில் இல்லை’
அபிஷேக் சர்மா குறித்து கவுதம் கம்பீர் கூறியதாவது: நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரின் முதல் 3 ஆட்டங்களில் அபிஷேக் சர்மா தொடர்ச்சியாக ரன் எடுக்காமலேயே ஆட்டமிழந்தார். ஆனால் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் அரை சதம் விளாசினார்.
அதற்கடுத்த போட்டியில் அவர் குறைந்த ரன்களில் வீழ்ந்தார். இருந்தபோதும், இறுதிப் போட்டியில் அவர் தனது பழைய அதிரடி ஆட்டத்துக்குத் திரும்பியிருந்தார். அவர் அவுட் ஆஃப் பார்மில் இல்லை.
அவருக்கு ரன்கள் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. அவ்வளவுதான். ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் தங்களது வாழ்வில் இதுபோன்று தொடர்ச்சியாக ரன் எடுக்காமல் அவுட்டாகும் நிலை வரும்.
அதுபோன்ற நிலைதான் அபிஷேக் சர்மாவுக்கும் ஏற்பட்டுள்ளது. இதேபோன்ற நிலைமை 2014-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியின்போது எனக்கு ஏற்பட்டது.
தொடர்ச்சியாக 3 முறை 0 ரன்களில் ஆட்டமிழந்தேன். ஆனால் கவலைப்படவில்லை. அடுத்த ஆட்டங்களில் எனது ஆட்டமுறையை மாற்றிக்கொண்டு ரன்களைக் குவித்தேன்.
இந்த சம்பவத்தை அபிஷேக் சர்மாவிடம் தெரிவித்து பயப்படாமல் விளையாடுமாறு கூறினேன்.
இறுதிப் போட்டியில் அபிஷேக் சர்மா அதை சரியாகச் செய்தார். அவர் மீது அணி வீரர்கள், குழுவினர் என அனைவரும் நம்பிக்கை வைத்திருந்தோம். அதை அவர் பொய்யாக்கவில்லை. இவ்வாறு கவுதம் கம்பீர் பேசியுள்ளார்.