3-வது ஒருநாள் போட்டி கடைசி ஒவர் வரை சென்று கடைசியில் பாகிஸ்தான் தோல்வி!! வங்கதேசத்திடம் ஒருநாள் தொடரை இழந்தது…..

மிர்பூரில் நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டி கடைசி ஒவர் வரை சென்று கடைசியில் பாகிஸ்தான் தோல்வியில் முடிந்து தொடரையும் 1-2 என்று இழந்தது.

முதலில் பேட் செய்த வங்கதேசம் தன்சித் ஹசன் (107) சதத்துடன் 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 290 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் அணி சல்மான் அலி ஆகாவின் (106) அற்புதமான விரட்டல் சதத்துடன் நெருக்கமாக வந்து 279 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்து தொடரையும் பறிகொடுத்தது.

இந்த இரண்டு அபார சதங்களை விட்டால் பாகிஸ்தான் அணியின் சரிவு, பாகிஸ்தான் வீரர்களின் ரன்னிங் என்னும் போதாமை, பினிஷ் செய்ய முடியாமல் தோல்வியை வாங்கிக் கட்டிக் கொண்ட பாகிஸ்தான் என்பது போன்ற படிமங்கள்தான் எஞ்சுகின்றன.

11 ஆண்டுகளுக்கு முன்பாக இரு அணிகளும் இருதரப்பு தொடரில் ஆடியது அதிலும் வங்கதேசம் வென்றது, இப்போது 11 ஆண்டுகளுக்குப் பிறகு இரு அணிகளும் இருதரப்பு தொடரில் மோதி இதிலும் பாகிஸ்தான் தோல்வி அடைந்துள்ளது.

ஆகவே 2 ஒருநாள் தொடர்களை தொடர்ச்சியாகவே வங்கதேசத்திடம் இழந்தது பாகிஸ்தான். கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவை, ஒரு விக்கெட்தான் மீதம், 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 35 ரன்களுடன் ஷாஹின் அஃப்ரீடி ஸ்ட்ரைக்கில் இருக்கிறார்.

ரிஷாத் ஹுசைன் பந்து வீச 2வது பந்தில் கேட்சைத் தவற விட்டார் பவுலர் ரிஷாத் ஹுசைன். அங்கேயே பாகிஸ்தானை முடித்து வீட்டுக்கு அனுப்பியிருக்க வேண்டும், ஆனால் கேட்ச் விடப்பட்டதால் கொஞ்சம் நம்பிக்கை பாகிஸ்தான் வசம் இருந்தது.

3வது பந்து லாங் ஆனில் அடிக்கப்பட்டு 2 ரன்கள். அடுத்த பந்தை ரிஷாத் கூக்ளியாக வீச அஃப்ரீடி கண்ணை மூடிக்கொண்டு ஸ்லாக் ஸ்வீப் செய்ய முயன்று பந்தை விட்டார்.

2 பந்துகள் 12 ரன்கள் தேவை என்ற நிலையில் ரிஷாத் ஹுசைன் பந்து ஒன்றை நடுவர் வைடு என்று அறிவித்தனர், ஆனால் அது ஷாஹின் அஃப்ரீடியின் மட்டை அடி விளிம்பில் பட்டது என்று வைடை வங்கதேசம் ரிவியூ செய்ய வைடு இல்லை என்று தீர்ப்பானது.

அடுத்த பந்து இறங்கி வந்து சுத்தினார் அஃப்ரீடி ஸ்டம்ப்டு ஆனார். 37 ரன்களை எடுத்தும் அஃப்ரீடியினால் பினிஷ் செய்ய முடியவில்லை அதுவும் கடைசி ஓவர் ஸ்பின்னர் வீசியும் முடியாதது எங்கோ பாகிஸ்தான் அணி வீழ்ந்து கொண்டிருப்பதையே அறிவுறுத்துகிறது.

சேசிங்கில் சல்மான் அலி ஆகா 67/4 என்ற நிலையில் இறங்கினார். சதம் எடுத்து இதை ஒரு மேட்ச் ஆக்கினார். முன்னதாக டஸ்கின் அகமது தன் முதல் ஓவரிலும் 3வது ஓவரிலும் முறையே ஃபர்ஹான், ரிஸ்வானை வெளியேற்றினார்.

மாஸ் சதகத் என்ற புதுமுக நம்பிக்கை நட்சத்திரம் நஹித் ராணாவிடம் எட்ஜ் ஆகி கேட்ச் கொடுத்து வெளியேறினார். பிறகு காஜி கோரி, அப்துல் சமது இணைந்து 50 ரன்கள் கூட்டணி அமைத்தனர்.

ஆனால் கோரி 29 ரன்களிலும் அப்துல் சமது 34 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். ஆனால் 36 ஓவர்களில் 224 ரன்கள்தான் தேவை, போட்டி பாகிஸ்தான் கைக்குள்தான் இருந்தது. அறிமுக வீரர் சாத் மசூத், சல்மான் இணைந்து 79 ரன்களைச் சேர்த்தனர்.

அப்போது சாத் மசூத் முஸ்தபிசுர் பந்தை இறங்கி வந்து அடிக்கப்பார்த்து பவுல்டு ஆகி வெளியேறினார். ஆனால் சல்மான் ஆகாவை நம்பி பாகிஸ்தான் ஆவலுடன் காத்திருந்தது, சல்மான் ஆகா 9 பவுண்டரிகளையும் 4 சிக்சர்களையும் அடித்து 98 பந்துகளில் 107 ரன்கள் எடுத்து 8வது விக்கெட்டாக 47.4 ஓவர்களில் ஸ்கோர் 261 ஆக இருந்த போது வெளியேறினார்.

ஆகாவும் அஃப்ரீடியும் 49 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்தனர். அஃப்ரீடி அதன் பிறகு தன்னால் இயன்றதை முயன்றார்.

கடைசி ஓவரில் அடிக்க முடியவில்லை. தோற்றது பாகிஸ்தான். டஸ்கின் அகமது 4 விக்கெட்டுகளையும் முஸ்தபிசுர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

முன்னதாக வங்கதேசம் சத நாயகன் தன்சித் ஹசன், சைஃப் ஹசன் (36) ஆகியோர் மூலம் 105 ரன்கள் தொடக்கம் கண்டது.

தன்சித் ஹசன் 107 பந்துகளில் 6 பவுண்டரி 7 சிக்சர்களுடன் 107 ரன்கள் எடுத்தார்.

ஷாண்டோ 27, லிட்டன் தாஸ் 41, தவ்ஹித் ஹிருதய் 48 என்று பங்களிப்பு செய்ய வங்கதேசம் 290/5 என்ற நல்ல இலக்கை எட்டியது. ஆட்ட மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தன்சித் ஹசன் தட்டிச் சென்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *