சென்னை:
தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனையில் மெரினா உட்பட 3 இடங்களில் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று முன்தினம் மாலை முதல் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து, அரசியல் கட்சிகள், பணம் கொடுத்து வாக்காளர்களை கவர்வதைதடுக்க தேர்தல் ஆணையம் பறக்கும் படைகளை அமைத்துள்ளது.
இந்த பறக்கும் படையினர் முக்கிய பகுதிகளில் கண்காணித்து வருகின்றனர். அதன்படி, மெரினா காமராஜர் சாலையில் அகில இந்திய வானொலி நிலையம் முன்பு சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதி பறக்கும் படை பொறுப்பாளர் உதவி செயற்பொறியாளர் திலக் தலைமையில் நேற்று மாலை கண்காணித்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த கார் ஒன்றை மறித்து சோதித்தபோது உரிய ஆவணங்கள் இல்லாமல் அதில் ரூ.1.29 லட்சம் இருந்தது தெரிந்தது. அதை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் காரை ஓட்டி வந்த நபர் மயிலாப்பூரை சேர்ந்த கார்த்திக் என்பதும், கட்டுமான பணிக்காக அந்த பணத்தை கொண்டு சென்றதும் தெரியவந்தது.
இதேபோல், வில்லிவாக்கம் தொகுதியில் ரூ.1.16 லட்சம், எழும்பூர் தொகுதியில் ரூ.55 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படுகிறது.