சென்னை:
தேர்தல் பிரச்சார அனுமதியை இணைய வழியில் விண்ணப்பித்து பெற வேண்டும் என்று, அரசியல் கட்சிகளுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.குமரகுருபரன் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை மாவட்டத்தில் அமலில் இருக்கும் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் விளக்கும் கூட்டம், மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.குமரகுருபரன் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தின் முடிவில் குமரகுருபரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 28.30 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
இத்தொகுதிகளில் 4,085 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. போலீஸ் மற்றும் தேர்தல் அலுவலர்கள் கொண்ட 375 மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குழுக்கள் வாக்கு இயந்திரங்களை தயார் செய்யும் பணி, வாக்கு இயந்திரங்களை வாக்குச்சாவடிக்கு அனுப்பி வைத்தல், வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர், வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லுதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும். வாக்குச்சாவடி அலுவலர்கள் 16,500 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு தொகுதி வாரியாக பயிற்சி அளிக்கப்படும்.
சென்னை மாவட்டத்தில் 13,634 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 6,349 கட்டுப்பாட்டுக் கருவிகளும் சரிபார்க்கப்பட்டு இருப்பில் உள்ளன.
ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள் என்ற வீதம் 48 பறக்கும் படைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை, தேர்தல் விதிமீறல்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்.
ஒவ்வொரு தொகுதிக்கும் 3 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் வீதம் 48 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த குழுக்கள், வாகனத் தணிக்கையில் ஈடுபடும். தேர்தல் விதிமீறல்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்.
ஒவ்வொரு தொகுதிக்கும் ஒன்று வீதம் 16 வீடியோ கண்காணிப்பு படைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கட்சிக் கூட்டங்கள் நிகழ்வுகளை இந்த படைகள் பதிவு செய்யும். தேர்தல் விதிமுறைகள் ஏதேனும் இருப்பின் நடவடிக்கை எடுக்கும்.
ரிப்பன் மாளிகையில் மாவட்ட தேர்தல் அலுவலக கட்டுப்பாட்டறை அமைக்கப்பட்டுள்ளது. அதை 18004257012 என்ற எண்ணில் தொடர்புகொண்டு விதிமீறல் தொடர்பாக புகார் தெரிவிக்கலாம். ஒரு தொகுதியில் ஒரு வேட்பாளர் ரூ.40 லட்சம் வரை செலவு செய்யலாம்.
ஒவ்வொரு செலவினத்துக்கான விலைப்பட்டியல் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தேர்தலுக்காக பேரணி, கூட்டம் நடத்த உள்ள இடங்கள், காவல் துறை மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஒற்றைச்சாளர முறையில் கூட்டங்கள் நடத்துவது, வாகனங்களை பயன்படுத்துவது போன்றவற்றுக்கு உரிய அனுமதியை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
வேட்பாளர்கள், பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் தற்காலிகக் கட்சி அலுவலகம் அமைத்தல் போன்ற 6 வகையான இனங்களுக்கு அனுமதி பெறுவதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் சுவிதா (Suvidha) என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
https://suvidha.eci.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். ஆர்கே நகர், திருவிக நகர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய 5 தொகுதிகளுக்கு ராணி மேரி கல்லூரியிலும், பெரம்பூர், கொளத்தூர்.
வில்லிவாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு மற்றும் அண்ணா நகர் ஆகிய 6 தொகுதிகளுக்கு லயோலா கல்லூரியிலும், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், மயிலாப்பூர் மற்றும் வேளச்சேரி ஆகிய 5 தொகுதிகளுக்கு கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்திலும் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
தற்போது 178 அமைவிடங்களில் 785 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச் சாவடிகளாக உள்ளன.
பேனர் மற்றும் போஸ்டர்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்த முறை சென்னையில் 80 சதவீதம் வரை வாக்குப்பதிவு நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.