திசையன்விளை அருகே முற்றிலும் எரிந்த நிலையில் காணப்பட்ட காரில் இருந்து நான்கு பேர் சடலங்கள் மீட்பு!!

திருநெல்வேலி:
திசையன்விளை அருகே முற்றிலும் எரிந்த நிலையில் காணப்பட்ட காரில் இருந்து நான்கு பேர் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே பெட்டைக் குளம் பகுதியில் இருந்து ஆத்தங்கரை பள்ளிவாசல் செல்லும் சாலையோரம் கார் ஒன்று முற்றிலும் எரிந்த நிலையில் காணப்பட்டது குறித்து போலீஸாருக்கு இன்று காலையில் தகவல் கிடைத்தது.

இதையடுத்து வள்ளியூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமாரும் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டார்.

முற்றிலும் எரிந்த நிலையில் காணப்பட்ட காருக்குள் 4 சடலங்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்த நிலையில் காணப்பட்டன. சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீஸார் அனுப்பி வைத்துள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்துக்கு தடய அறிவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

காரில் இறந்தவர்கள் யார் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள், இது விபத்தா அல்லது வேறு காரணங்களால் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதா என்பது குறித்து முழுமையான விசாரணைக்கு பின்பே தெரிய வரும்.

காரின் இன்ஜின் எண் மற்றும் பதிவு எண் ஆகியவற்றைக் கொண்டு காரில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *