2021 தேர்தலுக்காக 525 வாக்குறுதிகளை திமுக வெளியிட்டது; அதில் நான்கில் ஒரு பங்கினை கூட திமுக அரசு நிறை வேற்றவில்லை !! எடப்பாடி பழனிசாமி….

சென்னை:
‘‘2021 தேர்தலுக்காக 525 வாக்குறுதிகளை திமுக வெளியிட்டது. அதில் நான்கில் ஒரு பங்கினை கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை. இந்த உண்மையை மக்கள் புரிந்துகொண்டனர்.

எனவே, திமுக ஆட்சியை விரட்டியடிக்க தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டனர்’’ என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கூட்டணிக் கட்சிகள் சார்பில் சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழகம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, தன் குடும்பம் மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற மனநிலையில் உள்ள மு.க.ஸ்டாலின் தமிழகத்தை ஆட்சி செய்தார்.

இப்போது மக்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் நேரம் வந்துவிட்டது. திமுக ஆட்சி அமைந்தது முதலே தமிழகத்தில் சர்வ சாதாரணமாக கிராமம் முதல் நகரம் வரை ஜரூராக போதைப்பொருள் விற்பனை நடந்துகொண்டிருக்கிறது.

நம் குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க வேண்டும் என்ற கனவோடு பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் அனுப்புகிறோம்.

ஆனால், திமுக ஆட்சியில் பள்ளிகள், கல்லூரிகள் அருகிலே நடக்கும் கஞ்சா விற்பனையால் மாணவர்கள் சீரழியும் காட்சியை பார்க்கிறோம்.

நெல்லையிலே 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் மது அருந்தும் காட்சி வெளியாகி வேதனையை ஏற்படுத்தியது. இதனைப் பற்றியெல்லாம் ‘அப்பா’ ஸ்டாலின் கவலைப்படவே இல்லை.

இதுபோன்ற குற்றங்களை கண்டறியும் உளவுத் துறை தமிழகத்தில் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. குற்றங்கள், போதைப்பொருள் விற்பனை குறித்து அரசுக்கு உளவுத்துறை தெரிவித்திருக்க வேண்டும்.

ஆனால், உளவுத் துறை ஸ்டாலின் குடும்பத்தின் ஏவல் துறையாக இருக்கிறது. போதை ஆசாமிகளை பிடிக்க செல்லும் காவலர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தப்படுகிறது.

பயிரை காக்கும் வேலியாக இருக்கும் காவல்துறைக்கே இப்போது பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.

சென்னையில் ஒரு கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார், இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் படுகொலையிலும் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

கிருஷ்ணகிரியில் திமுகவை சேர்ந்த ஒருவர் 2 வயது குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்த கொடுமை நடந்தது.

நாமக்கல்லில் வீதியில் விளையாடிய 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

விளாத்திக்குளத்தில் பள்ளி மாணவி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது, அதனை எதிர்த்து திமுக அரசு மேல்முறையீடு செய்தது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 61 பேர் உயிரிழந்த விவகாரத்தில், சிபிஐ விசாரணைக்கு எதிராக திமுக அரசு மேல்முறையீடு செய்தது.

இப்படி குற்றவாளிகளுக்கு துணை நிற்கும் அரசாக திமுக அரசு உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை திமுக அரசு நீர்த்துப் போக செய்துள்ளது. அதிமுக ஆட்சி அமைந்ததும், இந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.

கரூரில் ரவுடிகளை வைத்து 3,000 லாரிகளில் தினமும் ரூ 1.5 கோடிக்கு மணல் கடத்தப்படுகிறது.

அதிகாரிகள் துணையுடன், திமுக முன்னாள் அமைச்சர் இந்த கனிமவளக் கொள்ளையில் முழுமையாக ஈடுபட்டுள்ளார்.

இதுவரை பணம், நகையை திருடியே பார்த்திருப்போம். ஆனால், மனித உடல் உறுப்புகளையே திருடும் ஆட்சி திமுக ஆட்சிதான்.

நாமக்கல்லில் வறுமை காரணமாக ஏழைகளிடம் சிறுநீரகத்தை, திமுக எம்எல்ஏவின் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முறைகேடாக திருடியுள்ளனர். இதன் மீது எந்த நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை.

நகர்ப்புற வளர்ச்சித்துறையில் நடந்த முறைகேடுகள் குறித்து அமலாக்கத்துறை நடத்திய சோதனையின் மீதான ஆதாரத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கடிதம் அனுப்பப்பட்டது.

ஆனால், அதன் மீது எப்ஐஆர் பதிவு செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. டாஸ்மாக் பாட்டில் விற்பனை மூலம் 24 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது.

திமுக ஆட்சியில் அனைத்துப் பொருட்களின் விலைவாசியும் கடுமையாக உயர்ந்துவிட்டது. ஆனால், அதனைப் பற்றி கவலைப்படாமல் தொடந்து போட்டோஷூட் நடத்துகிறார் ஸ்டாலின்.

திமுக ஆட்சியில் மின் கட்டணம் பன்மடங்கு உயர்ந்து விட்டது. அதிமுக ஆட்சியில் 1000 ரூபாய் மின்கட்டணம் செலுத்தியவர்கள் இப்போது 2500 ரூபாய் செலுத்துகிறார்கள். சொத்துவரி, கட்டட அனுமதி கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளது.

இந்தியாவிலேயே தமிழகம்தான் முதல் மாநிலம் என ஸ்டாலின் சொல்கிறார். ஆனால், கடன் வாங்குவதில்தான் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது.

இந்த ஆண்டு பிறந்தது முதல் கடந்த 75 நாட்களில் மட்டும் 246 கொலைகள் தமிழகத்தில் நடந்துள்ளன.

இந்த ஆட்சியில் குழந்தைகள், சிறுமிகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இந்த செய்தியை கூட அதிகாரிகளை வைத்து பேட்டி கொடுக்கிறார்கள்.

ஆட்சியாளர்களால் தைரியமாக மக்களிடம் பேச முடியவில்லை. அஜித் குமார், ஆகாஷ் ஆகியோர் லாக் அப் மரணத்தால் உயிரிழந்தனர்.

2021 தேர்தலுக்காக 525 வாக்குறுதிகளை திமுக வெளியிட்டது. அதில் நான்கில் ஒரு பங்கினை கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை. ஆனால், 98 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக ஸ்டாலின் சொல்கிறார்.

உண்மையை மக்கள் புரிந்துகொண்டனர். இந்த ஆட்சியை விரட்டியடிக்க தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டனர்.

அரசு ஊழியர்கள், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், தூய்மைப்பணியாளர்கள் தொடர்ந்து போராடுகின்றனர்.

இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம் தமிழகத்தில் நிரந்தர சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமிக்கப்படவில்லை.

நீதிமன்றம் குறிப்பிட்டும் 9 மாதங்களாக டிஜிபியை நியமிக்க திராணியற்ற அரசாக திமுக அரசு உள்ளது.

ஊழல் மற்றும் குடும்ப ஆட்சி நடத்தும் திமுகவுக்கு முடிவு கட்டவேண்டிய நேரம் வந்துவிட்டது. சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்” என தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *