சென்னை:
“இந்த தேர்தலில் அதிமுக-வுக்கு மக்கள் வாய்ப்பளித்தால் இந்தியாவே வியக்கும் ஆட்சியை கொடுப்போம்” என்று சென்னை ஆலந்தூரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.
இது தொடர்பாக பழனிசாமி, ஆலந்தூர் தொகுதிக்கு உட்பட்ட நங்கநல்லூர், எம்ஜிஆர் சாலையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றுப் பேசியதாவது:
ஆலந்தூர் தொகுதி அதிமுக-வின் கோட்டை. வரும் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்பதற்கு இங்கே கூடியிருக்கும் மக்களே சாட்சி.
நான் மயிலாப்பூர் தொகுதி பிரச்சாரத்தில் பேசிய பேச்சால், ஸ்டாலினுக்கு தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டது. என் பேச்சுக்கு 3 அமைச்சர்கள் ஏதேதோ வகையில் பதில் சொல்லியிருக்கிறார்கள்.
நாங்கள் சொன்ன கருத்துக்கு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. ஸ்டாலின் அதிர்ச்சியடைந்து இருக்கிறார்.
ஸ்டாலின் தொடர்ந்து 25 நாட்களாக தேர்தல் கூட்டணி குறித்து பேசி வருகிறார். இன்னும் முடிவு எட்டவில்லை. ஒரே நாளில் கூட்டணி தலைவர்களுடன் பேசி, எத்தனை இடங்கள் ஒதுக்கீடு என அப்போதே அறிவித்த கட்சி அதிமுக.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் எல்லாம் புலம்பிக்கொண்டு இருக்கின்றன.
10 ஆண்டுகளாக கூட்டணிக் கட்சிகள் உங்களுக்கு விசுவாசமாக இருந்தார்கள். தமிழகத்தில் நடைபெற்ற பாலியல், கொலை, கொள்ளை பற்றி திமுக கூட்டணிக் கட்சிகள் பேசாமல், உங்கள் ஆட்சிக்கு துணையாக நின்றார்கள், அப்படி இருந்தும் உங்களுடன் இருந்தவர்களுக்கு ஒரு இடத்தைக் குறைத்துக் கொடுத்துள்ளீர்கள்.
ஒவ்வொரு கட்சியும் மக்களுக்காக பாடுபட வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட இயக்கங்கள். மக்கள் பிரச்சினையை எடுத்துரைக்க வேண்டும் என்பது கட்சிகளின் முதன்மை நோக்கமாக இருக்கவேண்டும்.
ஆனால், திமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணிக் கட்சிகள் மக்களுடைய பிரச்சினைகளை கண்டுகொள்ளவில்லை.
அதனால் அந்தக் கூட்டணிக் கட்சிகள் மக்கள் செல்வாக்கை இழந்து விட்டதால், அவர்களுக்கு குறைவான இடங்களை திமுக வழங்கி இருக்கிறது.
2011-ல் கருணாநிதி தலைமையில் இருந்த திமுக-வுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை.
ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2021-ல் பிரதான எதிர்க்கட்சி என்ற நிலையில் அமர்ந்தோம். 2021 அதிமுக ஆட்சியில் இருந்த வருவாயை விட 2024-25 திமுக ஆட்சியில் வருவாய் ரூ.1.36 லட்சம் கோடி கூடுதலாக வந்துள்ளது.
அப்படி இருந்தும் கடன் வாங்க வேண்டிய அவசியம் என்ன? அதாவது அத்தனையும் ஊழல். திமுக ஆட்சியில் எந்தப் புதிய திட்டமும் கொண்டுவரப்படவில்லை.
இப்படிப்பட்ட மோசமான ஆட்சி தொடர வேண்டுமா? மக்கள் இந்தத் தேர்தலில் நல்ல வாய்ப்பை தருவீர்கள் என்று நம்புகிறோம், கொடுத்தால் இந்தியாவே வியக்கும் அளவுக்கு ஆட்சி கொடுப்போம்.
ஸ்டாலினைப் போல் வாரிசாக இல்லாமல், உழைத்து உங்களிடம் வந்திருக்கிறேன். ஸ்டாலினும் நானும் 1989-ல் எம்எல்ஏ ஆனோம். அவர் வந்த வழி வேறு; நான் வந்த வழி வேறு. அவர் அப்பா கருணாநிதி.
அதனால் சுலபமாக வென்று வந்தார். நான் சாதாரண தொண்டனாக இருந்து எம்எல்ஏ ஆகி, எம்பி ஆகி, அமைச்சராகி, படிப்படியாக உயர்ந்து முதல்வர் ஆனேன். வாரிசு அரசியல், குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் இது.
சுதந்திரமாக மக்கள் செயல்படும் ஆட்சி வேண்டும் என்றால் தே.ஜ.கூட்டணியில் அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதனைத் தொடர்ந்து தாம்பரத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், மதுராந்தகம் தொகுதி வேட்பாளர் மரகதம் குமரவேல் உள்ளிட்டோருக்கு ஆதரவாக பழனிசாமி வாக்கு சேகரித்தார்.