மதுரை:
மதுரை வடக்கு தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்பே தேர்தல் பணிகளை தொடங்கிய டாக்டர் சரவணன், மாநகர் செயலாளர் செல்லூர் ராஜூவை மீறி கட்சித் தலைமை யின் நேரடி ஆசியுடன் சீட் பெற்றுள்ளார்.
மதுரை வடக்குத் தொகுதியில் திமுக மாநகரச் செயலாளர் தளபதி தற்போது எம்எல்ஏ-வாக உள்ளார். இங்கு அதிமுக 2 முறையும், திமுக கடந்த முறையும் வெற்றி பெற்றுள்ளது. மீண்டும் தளபதியே இந்த தொகுதியில் போட்டியிட உள்ளார்.
தொகுதியில் முகாமிட்டு மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். இந்த முறை அதிமுக இந்த தொகுதியை கைப்பற்றும் நோக்கில், முன்னாள் எம்எல்ஏ டாக்டர் சரவணனை நேற்று வேட்பாளராக அறிவித்துள்ளது.
சரவணன் அதிமுக மருத்துவர் அணி இணைச் செயலாளராக உள்ளார். ஏற்கெனவே திருப்பரங் குன்றத்தில் எம்எல்ஏவாக இருந்தவர்.
திமுகவில் 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ‘சீட்’ கிடைக்காததால் தேர்தல் நேரத்தில் பாஜகவில் சேர்ந்து அதிமுக கூட்டணியில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு 50,094 வாக்குகளைப் பெற்றார்.
மாநகர திமுக செயலாளர் தளபதி 73,010 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த முறை எப்படியும் சீட் வாங்கிவிடுவோம் என்ற நம்பிக் கையில், கடந்த 5 ஆண்டுகளாக தன்னுடைய மருத்துவமனை, டிரஸ்ட் உள்ளிட்டவை சார்பில் நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம்கள் நடத்தி மக்களிடம் நெருக்கம் காட்டி வந்துள்ளார்.
மாநகர அதிமுக செயலாளர் செல்லூர் ராஜூ, இவரை வடக்கு தொகுதிக்கு பரிந்துரை செய்யவில்லை. ஆனாலும் கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் யாரும் மதுரை தொகுதியில் போட்டியிட முன்வராத நிலையில் டாக்டர் சரவணன், தனது சொந்தப் பணத்தை செலவு செய்து போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
மாநகர நிர்வாகிகளின் ஒத்துழைப்பு இல்லாததால், அதிமுக 3-ம் இடத்துக்குச் சென்றது.
அதனால், கட்சித்தலைமை இவருக்கு சட்டப்பேரவை தேர்தலில் வாய்ப்பு வழங்குவ தாக உறுதியளித்து இருந்தது. தலைமை கூறியது போலவே, தற்போது அவருக்கு சீட்டும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பு, டாக்டர் சரவணனின் அரசியல் வாழ்க்கையில் முக்கிய மானதாக கருதப்படுகிறது. அதனால் அவர் திமுகவுக்கு கடும் போட்டியை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளுங்கட்சி, வாக்காளர் கவனிப்பு போன்றவற்றால் இந்த முறையும் வெற்றி பெறலாம் என தளபதி திட்டமிட்டு வருகிறார். வடக்குத் தொகுதியில் திமுக-அதிமுக இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.