புதுடெல்லி:
மேற்கு ஆசிய மோதல் தொடங்கியதில் இருந்து, ரூபாயின் மதிப்பு சரிந்து வருவது குறித்து நாடாளுமன்ற மக்களவையில் எழுப்பப் பட்ட கேள்விக்கு பதிலளித்து சீதாராமன் கூறியதாவது:-
வளர்ந்து வரும் சந்தை நிலவரங்களை ஒப்பிடுகையில், இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக உள்ளது. நமது நிதி நிலைமையும் வலுவாக இருக்கிறது.
நமது நிதிப்பற்றாக்குறை மேலாண்மையை உலகம் முழுவதும் உள்ள நாடுகள் பாராட்டி வருகிறது. நமது அன்னிய செலாவணி கையிருப்பும் மிகவும் பலமாக உள்ளது.
மற்ற வளர்ந்து வரும் பொருளாதாரங்களுடன் ஒப்பிடுகையில், ரூபாய் மிக சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது.
ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியானது இந்திய ரூபாய்க்கு மட்டுமேயான தனித்துவமான நிகழ்வு அல்ல. மேற்கு ஆசிய மோதல் தொடங்கியதில் இருந்து, ஆசியாவின் முக்கிய நாணயங்களின் மதிப்பும் வீழ்ச்சியடைந்துள்ளது.
தென் கொரிய வோன், தாய் பாத் மற்றும் பிலிப்பைன்ஸ் பெசோ போன்ற சில நாணயங்கள், அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயை விட அதிகளவில் வீழ்ச்சியடைந்துள்ளன.
இவை முறையே 4.6 சதவீதம், 5.5 சதவீதம் மற்றும் 4.8 சதவீதம் சரிவைக் கண்டுள்ளன. இவ்வாறு நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.
இதே கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி, ரூபாயின் மதிப்பானது சந்தை சக்திகளால் தீர்மானிக்கப்படுகிறது. பல்வேறு காரணிகளால் அது பாதிக்கப்படுகிறது.
மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் ரூபாயின் மதிப்பை தொடர்ந்து மிக கூர்ந்து கண்காணித்து வருகின்றன.
இந்தியாவில் பணவீக்கம் தணிந்துள்ளது. சராசரி சில்லரை பணவீக்கமானது 2020-21 நிதியாண்டில் இருந்த 6.2 சதவீதம் என்பது குறைந்து, 2024-25-ல் 4.6 சதவீதமாகவும், மேலும் குறைந்து 2025-26-ல் (ஏப்ரல் முதல் பிப்ரவரி வரை) 1.9 சதவீதமாகவும் சரிவடைந்துள்ளது.
பெரும்பாலான அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வீழ்ச்சிப் போக் கைக் காட்டி வருகிறது.
நடப்பு நிதியாண்டில் மார்ச் 27-ந் தேதி வரை அமெரிக்க டாலருக்கு எதி ராக இந்திய ரூபாயின் மதிப்பு 9.9 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது என் றார்.